பாகிஸ்தான் விமானங்கள் 10 சுட்டு வீழ்த்தப்பட்டன: இந்திய விமானப்படை தளபதி அறிவிப்பு

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது பாகிஸ்தானின் 10 விமானங்கள் அழிக்கப்பட்டதாக இந்திய விமானப்படை தளபதி அமர்ப்ரீத் சிங் தெரிவித்துள்ளார்.

இந்திய விமானப்படை தினம் அக்டோபர் 8-ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. அன்றைய தினம் ஹின்டன் விமானப்படைத் தளத்தில் அணிவகுப்பு நடைபெற உள்ளது. இதையொட்டி இந்திய விமானப்படை தளபதி அமர்ப்ரீத் சிங் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், ” ஆபரேஷன் சிந்தூர் இந்த ஆண்டின் சிறந்த கூட்டு ராணுவ நடவடிக்கையாகும். இந்த தாக்குதல் இந்திய விமானப்படையின் வலிமையை வெளிக்காட்டியுள்ளது. பாகிஸ்தான் எல்லைக்குள் சுமார் 300 கிமீ நுழைந்து சென்று இந்த தாக்குதலை வெற்றிகரமாக நிறைவேற்றியுள்ளோம்.

இதில் ரஷ்யாவிடமிருந்து வாங்கிய உயர்தர தொழில்நுட்பம் கொண்ட எஸ் 400 ஏவுகணை அமைப்பு தான் முக்கிய பங்கு வகித்தன. நாங்கள் இலக்குகளை துல்லியமாக தாக்கினோம். நம் படையினருக்கு குறைந்த பாதிப்புகளே ஏற்பட்டன. ஒரே இரவில் பாகிஸ்தானை முழங்காலிடச் செய்தோம். இந்திய ராணுவம், கப்பற்படை, விமானப்படையின் கூட்டு நடவடிக்கையே இந்த வெற்றிக் காரணமாகும்.

ஆனால், ஆபரேஷன் சிந்தூரின் போது தவறான தகவல்கள் பரப்பப்பட்டன. ஆனால், அதற்கு மீடியாக்கள் சரியான பதிலை கொடுத்தனர். ஏனெனில், நம் வீரர்கள் சண்டையிடும்போது பொதுமக்களின் மன உறுதி பாதிக்கப்படக்கூடாது. இந்த தாக்குதலின்போது, இந்திய விமானப்படை விமானங்கள் நடத்திய தாக்குதலில், பாகிஸ்தான் விமானப்படையின் எப் 16, ஜேஎப் 17 ரக விமானங்கள், ஒரு கண்காணிப்பு விமானம் ஆகியவை, வான்வெளியில் பறந்தபோது சுட்டு வீழ்த்தப்பட்டன.
இவை மட்டுமின்றி, பாகிஸ்தான் ரேடார் நிலைகள், கட்டளை மையங்கள், ஓடுபாதைகள், விமான ஹேங்கர்கள் மீது இந்தியா நடத்திய துல்லிய தாக்குதலின்போது, 4 முதல் 5 விமானங்கள் அழிக்கப்பட்டன. ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையில் பாகிஸ்தானுக்குச் சொந்தமான 10 விமானங்கள் வீழ்த்தப்பட்டன” என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *