துணை ஜனாதிபதி தேர்தலில் இந்தியா கூட்டணி வேட்பாளர் சுதர்சன் ரெட்டி இன்று வேட்புமனு தாக்கல் செய்தார்.
ஜெகதீப் தன்கர் ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, துணை ஜனாதிபதி பதவி காலியானதாக அறிவித்த இந்திய தேர்தல் ஆணையம், தேர்தலையும் அறிவித்தது. இதன்படி அடுத்த 9-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் மகாராஷ்டிரா ஆளுநரும், தமிழ்நாட்டை சேர்ந்தவருமான சி.பி.ராதாகிருஷ்ணனும், இந்தியா கூட்டணி சார்பில் உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி சுதர்சன் ரெட்டியும் போட்டியிடுகின்றனர். இதற்கான வேட்புமனு தாக்கல் இன்றுடன் நிறைவடைகிறது.
இந்த நிலையில், பிரதமர் நரேந்திர மோடி முன்னிலையில் தேசிய ஜனநாயக வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணன் நேற்று தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.
இந்நிலையில் இந்தியா கூட்டணி வேட்பாளர் சுதர்சன் ரெட்டி தேர்தல் நடத்தும் அதிகாரியான நாடாளுமன்ற செயலாளரிடம் வேட்புமனு தாக்கல் செய்தார்.
இந்த நிகழ்வின்போது காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, சரத்பவார், திருச்சி சிவா உள்ளிட்ட இந்தியா கூட்டணி கட்சிகளின் எம்.பி.க்கள், காங்கிரஸ் ஆளும் மாநில முதல்மந்திரிகள் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர். முன்னதாக சுதர்சன் ரெட்டி நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள மகாத்மா காந்தி சிலை மற்றும் பிற தலைவர்களின் சிலைகளுக்கு மரியாதை செலுத்தினார்.