அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று இரவு 8 மணியளவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து பேச உள்ளார். அப்போது அதிமுகவை ஒன்றிணைக்க வேண்டும் என்ற கலகக் குரல்களுக்கு மடங்குவாரா, மறுப்பாரா என்பது தெரிய வரும்.
அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டவர்களை இணைக்க வேண்டும் என்றும், இல்லாவிட்டால் 10 நாட்களில் நாங்களே இணைப்போம் என்று எடப்பாடி பழனிசாமிக்கு, செங்கோட்டையன் சவால் விடுத்திருந்தார். அவரின் பேச்சுக்கு ஓ.பன்னீர்செல்வம், டி.டி.வி.தினகரன், சசிகலா ஆகியோர் ஆதரவ குரல் கொடுத்தனர். இந்த நிலையில் அடுத்த நாளே செங்கோட்டையனின் கட்சி பொறுப்புகளை எடப்பாடி பழனிசாமி பறித்தார். செங்கோட்டையன் கொடுத்த கெடு முடிந்த நிலையில், அவர் அதிருப்தியடைந்தார். இதனால் கடந்த வாரம் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை செங்கோட்டையன் சந்தித்து பேசினார்.
இந்த நிலையில், தேசிய ஜனநாயக கூட்டணியில் முதலமைச்சர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமியை ஏற்க முடியாது என்று அறிவித்து கூட்டணியில் இருந்து அமமுக விலகியது. இந்த நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி டெல்லிக்கு இன்று சென்றார். டெல்லியில் உள்ள துணை ஜனாதிபதி மாளிகையில் சி.பி.ராதாகிருஷ்ணனை அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். அவருடன் அதிமுக நிர்வாகிகள் உடன் சென்றுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து இன்று இரவு 8 மணிக்கு அமித்ஷாவை அவரது இல்லத்தில் எடப்பாடி பழனிசாமி சந்தித்து பேச உள்ளார். இந்த சந்திப்பின் போது, செங்கோட்டையன் எழுப்பியுள்ள பிரச்னை, அதிமுகவில் இருந்து பிரிந்தவர்களை மீண்டும் சேர்க்கும் விவகாரம் உள்ளிட்டவை குறித்து அமித்ஷாவுடன் விரிவாக பேச உள்ளார்.
அதிமுக பலம் பெற்றால் தான், அதாவது விலகியவர்கள் சேர்ந்தால் தான், சட்டமன்ற தேர்தலில் அத்துடன் கூட்டணி சேர்ந்துள்ள பாஜக பலன் பெறும் என்பதால், அந்த கோரிக்கையை அமித்ஷா வலியுறுத்துவார் என்றே தெரிகிறது. இந்த கோரிக்கையை எடப்பாடி பழனிசாமி ஏற்பாரா அல்லது மறுப்பாரா என்பது இந்த சந்திப்புக்கு பின் தெரிய வரும். எனவே, இந்த சந்திப்பு அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக மாறியுள்ளது.