காங்கிரஸ் நாட்டை பல துண்டுகளாக துண்டாக்கிவிட்டது என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா குற்றம் சாட்டியுள்ளார்.
இந்தியாவின் 79-வது சுதந்திர தினம் நாளை கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. டெல்லி செங்கோட்டையில் தேசியக்கொடி ஏற்றி வைத்து பிரதமர் நரேந்திர மோடி நாளை உரையாற்ற உள்ளார். ஜனாதிபதி திரவுபதி முர்மு நாட்டு மக்களுக்காக இன்று இரவு 7 மணிளவில் உரையாற்ற உள்ளார். சுதந்திர தினத்தை முன்னிட்டு பல்வேறு கட்சி தலைவர்கள் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
கடந்த 1947-ம் ஆண்டு இதே நாளில் இந்தியாவிடமிருந்து பாகிஸ்தான் தனியாக பிரிந்து சென்றது. ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 14-ம் தேதியை நினைவு தினமாக கடைபிடிப்பதை 2021-ம் ஆண்டில் இருந்து மத்திய அரசு கடைபிடித்து வருகிறது. பிரதமர் மோடியின் அறிவுப்புபடி பிரிவினை கொடுமைகள் தினமாக இன்று கடைபிடிக்கிறது.
இந்த நாளை முன்னிட்டு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தனது எக்ஸ் தளத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில், இந்தியா பிரிக்கப்பட்டது மிகப்பெரிய கொடூரமாகும். அதன் காரணமாக மிகப்பெரிய வன்முறை நிகழ்ந்தது. லட்சக்கணக்கான மக்கள் இடம் பெயர்ந்தனர். இதற்கெல்லாம் காரணம் காங்கிரஸ்தான்.
அன்றைய தினம் காங்கிரஸ் நாட்டை பல துண்டுகளாக துண்டாக்கிவிட்டது. அன்னை இந்தியாவின் மகிழ்மையை காங்கிரஸ் கட்சி காயப்படுத்திய தினம் ஆகும். இதனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு எனது அனுதாபத்தை தெரிவித்துக் கொள்கிறேன். இந்தியர்கள் இந்த வரலாற்றுக் கொடூரத்தை ஒரு நாளும் மறக்கமாட்டார்கள். பிரிவினையால் ஏற்பட்ட துன்பம் மறக்க முடியாதது என்று பதிவிட்டுள்ளார்.