டெல்லியில் தலைமை தேர்தல் ஆணையரை சந்தித்த ராமதாஸ் தரப்பு பாமகவினர் அன்புமணி தரப்பிற்கு அங்கீகாரம் அளித்தது தொடர்பாக புகார் அளித்துள்ளனர்.
பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் அவரது மகன் டாக்டர் அன்புமணி ராமதாஸ் இடையே அதிகார போட்டி நடைபெற்று வருகிறது. இதனால் பாமகவினர் இரண்டு அணிகளாக இயங்கி வருகின்றனர். இந்த நிலையில் அன்புமணி தரப்பில் பொதுக்குழுவை நடத்தினர். அக்கூட்டத்தில் அன்புமணியை ஒரு வருடத்திற்கு தலைவராக நீட்டித்து தீர்மானம் நிறைவேற்றினர். இதற்குப் பதிலுக்கு டாக்டர் ராமதாஸ் சிறப்பு பொதுக்குழுவை நடத்தினர். அதில், கட்சியின் நிறுவனர் மற்றும் தலைவராக ராமதாஸை தேர்ந்தெடுத்தனர். இதையடுத்து செப்டம்பர் 11-ம் தேதி பாமகவில் இருந்து அன்புமணியை நீக்குவதாக டாக்டர் ராமதாஸ் அறிவித்தார்.
இந்த நிலையில் நேற்று முன் தினம் அன்புமணி தரப்பு வழக்கறிஞர் கே.பாலு பத்திரிகையாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் “அன்புமணி தலைமையில் நடந்த பொதுக்குழு கூட்டத்தை இந்திய தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ளது. மேலும் சென்னை தி.நகரில் உள்ள பாமக அலுவலகத்தை, பாமகவின் தலைமை அலுவலகமாக தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ளது. பாமகவுக்கு மாம்பழம் சின்னம் வழங்கப்பட்டுள்ளது. அன்புமணியை தலைவராக ஏற்றுக்கொண்டவர்கள்தான் பாமகவின் கொடி, சின்னத்தைப் பயன்படுத்த முடியும்” என்று கூறினார். இதற்கு டாக்டர் ராமதாஸ் தரப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்த சூழலில் டாக்டர் ராமதாஸ் தரப்பைச் சேர்ந்த எம்எல்ஏ அருள், பொதுச்செயலாளர் முரளி சங்கர், சட்ட ஆலோசகர் டாக்டர் அருள், சுவாமிநாதன் ஆகியோர் டெல்லி தலைமைத் தேர்தல் ஆணையரை சந்தித்து அன்புமணி மீது புகார் அளித்தனர்.
அந்த புகாரில், தலைவர் பதவியில் இல்லாத ஒருவரின் குழுவிற்கு கட்சியின் சின்னம், அங்கீகாரத்தை ஒதுக்கி இருப்பது ஏற்புடையதல்ல. நாங்கள் பல்வேறு மனுக்கள் அளித்தும் அதன் மீது நடவடிக்கை எடுக்காமல் தேர்தல் ஆணையம் ஒருதலைபட்சமாக செயல்பட்டு, அன்புமணிக்கு கடிதம் அனுப்பியுள்ளது. உரிய நடைமுறை இல்லாமல் அன்புமணிக்கு கடிதம் அளித்தது தவறு. அதைத் திரும்பப் பெற வேண்டும். உரிய விசாரணை அடிப்படைக்கு பிறகு அங்கீகாரம் வழங்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.