சிலை கடத்தல் விசாரணை கோப்புகள் மாயமான வழக்கில் தமிழக தலைமைச் செயலாளருக்கு சம்மன் அனுப்ப நேரிடும் என்று உச்சநீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
தமிழ்நாட்டில் சிலை கடத்தல் வழக்கு விசாரணை தொடர்பான கோப்புகள் மாயமான விவகாரத்தில் சிறப்பு புலனாய்வு குழுவை அமைக்கக்கோரி வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு வழக்குத் தொடுத்திருந்தார். இவ்வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விசாரணை நீதிபதிகள் பி.விநாகரத்னா, ஆர்.மகாதேவன் அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது மனுதாரர் ராஜேந்திரன் தரப்பு, சிலை கடத்தல் வழக்கு தொடர்பான ஆவணங்கள் மாயமானது சாதாரண விஷயம் அல்ல. இந்த 41 ஆவணங்களும் முழுமையாக அழிக்கப்பட்டு காணாமல் போய் உள்ளன. அவ்வாறு ஒருவேளை காணாமல் போயிருந்தால் கூட அது தொடர்பாக ஒரு முதல் தகவல் அறிக்கைக்கூட பதிவு செய்யப்படவில்லை. வெளிநாட்டிற்கு கடத்தப்பட்ட சிலைகளுடைய விவரங்கள் அந்த ஆவணங்களில் இருந்தன. அதேவேளையில் இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட பலர் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
எனவே, சிலை கடத்தல் வழக்குகளை அதிகாரிகள் கையாண்ட விதத்தில் நிறைய சந்தேகங்கள் உள்ளன. அதனால் தான் கோப்புகள் காணாமல் போனதில் சந்தேகம் இருக்கிறது. அரசு சொல்வது போல கோப்புகள் காணாமல் போகவில்லை. அது திருடப்பட்டிருக்கிறது. மேலும் திருடப்பட்ட பல சிலைகளைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்பதாலேயே வழக்குகள் முடித்து வைக்கப்பட்டுள்ளது என்று வாதிட்டது.
மனுதாரரின் வாதங்கள் குறித்த நீதிபதிகளின் கேள்விக்குப் பதிலளித்த தமிழ்நாடு அரசு தரப்பு, இந்த விவகாரத்தில் விரிவாக விளக்கங்களை பிரமாணப் பத்திரமாக தாக்கல் செய்துள்ளோம். மேலும் இது 1985-ம் ஆண்டு முதலாக பல்வேறு சிலைகள் காணாமல் போனது தொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதேவேளையில் தற்போதுள்ள விவகாரத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மாயமான ஆவணங்கள் தொடர்பாக தற்போது விசாரணை நடக்கப்பட்டு வருகிறது. மேலும் சில ஆவணங்கள் ரீ- கான்ஸ்ட்ராக்ட் செய்யப்பட்டுள்ளன என்று தெரிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து நீதிபதிகள், ” சிலை கடத்தல் தொடர்பான ஆவணங்கள் தொலைந்தது எப்படி? மொத்தம் 375 சிலைகள் திருடப்பட்டுள்ளதாக ஆவணங்கள் தெரிவிக்கின்றன அவை அனைத்தும் வெளிநாட்டில் உள்ள மியூசியத்தில் வைக்கப்பட்டுள்ளன. 41 ஆவணங்கள் தொலைந்துள்ளன. அதுகுறித்து எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன ? அது சார்ந்து முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளதா? சிலை கடத்தல் ஆவணங்கள் அழிக்கப்பட்டது எப்படி? 38 காவல் நிலையங்களில் ஒரே நேரத்தில் தீ விபத்து எதுவும் ஏற்பட்டு கோப்புகள் அழிந்துவிட்டனவா? எனவே இது தொடர்பான விளக்கம் எங்களுக்கு தேவை எவ்வாறு ஆவணங்கள் அளிக்கப்பட்டன அல்லது எப்படி மாயமானது ?” என்று கேள்விகளை எழுப்பினர்.
மேலும் இது தொடர்பான முழுமையான விளக்கங்களை தமிழ்நாடு அரசு தெரிவிக்க வேண்டும். இல்லையெனில் நாங்கள் தலைமைச் செயலாளருக்கு சம்மன் அனுப்ப நேரிடும் என்று எச்சரித்தனர். மேலும் தமிழ் நாட்டிலிருந்து சிலைகள் வெளிநாட்டுக்கு கடத்தப்பட்டிருப்பதால் மத்திய அரசையும் ஒரு எதிர்மானுதார்ராக சேர்க்க வேண்டும். அந்த வகையில் வெளியுறவுத்துறை அமைச்சகம் மற்றும் கலாச்சாரத்துறை அமைச்சகத்தை வழக்கில் இணைத்து உத்தரவிட்டனர். தொடர்ந்து நீதிபதிகள் வழக்கு விசாரணையை நவம்பர் 11- ம் தேதிக்கு வழக்கை ஒத்திவைத்தனர்.