குடியிருப்பு, சாலை, தெருக்களில் சாதிப் பெயர்களை நீக்கி பொதுப் பெயர்களை வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
தமிழ்நாட்டில் 10 ஆயிரம் கிராம ஊராட்சிகளில் இன்று நடைபெறும் கிராம சபை கூட்டங்களில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலிக் காட்சி வாயிலாக பங்கேற்றார். அவருடன் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் ககன்தீப்சிங்கும் இணைந்தார். அப்போது மக்களை தொடர்பு கொண்டு குறைகளை கேட்டறிந்தார். அவற்றை நிறைவேற்ற அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
அதன்பின்னர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், “மக்களிடம் செல், அவர்களுடன் வாழ், அவர்களிடமிருந்து கற்றுக்கொள், அவர்களை நேசி, அவர்களுக்கு சேவை செய் எனும் பேரறிஞர் அண்ணா காட்டிய பாதையில் திராவிட மாடல் அரசு சமூகநீதி, சமத்துவம், சமதர்மம் ஆகிய லட்சியங்களுடன் செயலாற்றி வருகிறது. கிராம பொருளாதாரத்தை உயர்த்த வேண்டும், நிர்வாகங்கள் வலிமையாக இருக்க வேண்டும் என திட்டங்கள் தீட்டியுள்ளோம். இத்திட்டங்கள்தான் தமிழ்நாட்டின் கிராம ஊராட்சிகளின் மேம்பாட்டிற்கு அடிப்படை. முதலமைச்சராக மூன்றாவது முறையாக கிராம சபை கூட்டத்தில் பங்கேற்பதில் பெருமை கொள்கிறேன்.
கிராமங்களின் தேவைகள், வளர்ச்சி இலக்குகள், நலன் குறித்து விவாதித்து தீர்மானம் நிறைவேற்றும் விழா இது. குடியிருப்பு, சாலை, தெருக்களில் சாதிப் பெயர்களை நீக்கி பொதுப் பெயர்களை வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். நமது திராவிட மாடல் அரசின் அடுத்த திட்டமாக நம்ம ஊரு-நம்ம அரசு எனும் திட்டத்தை கொண்டு வந்துள்ளோம். இதன் மூலம் கிராம அளவில் மக்களுக்கு தேவையான உடனடியாக தீர்க்கப்படக் கூடிய மூன்று திட்டங்கள் கிராமசபைகளில் தீர்மானமாக நிறைவேற்றப்பட வேண்டும்.
பருவமழையை எதிர்கொள்ள அனைத்து ஊராட்சிகளும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். ஒவ்வொரு வீட்டிலும் குழந்தைகள் படிப்பதை உறுதி செய்ய வேண்டும். குழந்தை தொழிலாளர்களாக ஈடுபடுத்தினால் மாவட்ட நிர்வாகத்திடம் தகவல் கூறி மீட்க வேண்டும். கிராமப்புற முன்னேற்றத்தை சாத்தியப்படுத்தியது சுய உதவிக்குழு திட்டம். மகளிர் சுய உதவிக் குழுக்களின் அடுத்தகட்ட பாய்ச்சல்தான் மகளிர் உதவித்தொகை. மகளிருக்கான விடியல் பயணத் திட்டம். பெண்கள் முன்னேற்றத்தில் முக்கியப்பங்கு வகிக்கிறது” என்றார்.
