திமுகவின் கூலிப்படையாக காவல்துறை செயல்படுகிறது என்று யுடியூபர் சவுக்கு சங்கர் குற்றம் சாட்டியுள்ளார்.
திருச்சியில் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், “என் மீது ஏற்கெனவே 35 வழக்குகள் நிலுவையில் உள்ளன. 15 வழக்குகள் விசாரணையிலும், 20 வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சென்னையில் யூடியூபில் மீடியா சேனல் நடத்துகிறேன். அதில் தினமும் அரசியல் நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும்.
ஆனால், இன்று திருச்சி, அடுத்த வாரம் மதுரை, அதற்கு அடுத்த வாரம் கோவை, அதற்கு அடுத்த வாரம் கரூர் என தமிழகம் முழுவதும் ஒவ்வொரு நீதிமன்றத்துக்கு என்னை அழைத்தால், மீடியாவை நடத்த முடியாது. அதை தொடர்ந்து நடத்துவதால் திமுக அரசு அம்பலப்படுகிறது. இதனால் காவல்துறையைப் பயன்படுத்தி என்னைப் பேசவிடாமல் தடுக்க, முடக்க முயற்சி செய்கின்றனர்.
தவெக தலைவர் விஜய் இன்னும் இரண்டு நாட்களில் திருச்சிக்கு செய்ய வர உள்ளார். அவர் ஒரு அரசியல் கட்சி தலைவர். பிரசாரம் செய்ய வேண்டும் என்றால் அவர் பிரசாரம் செய்யட்டும். ஆனால், காவல் துறையை பயன்படுத்தி அவரை எப்படி முடக்குகிறார்களோ அதே போல என்னையும் முடக்குகிறார்கள்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பிரசாரத்திற்கு செல்லும் இடமெல்லாம் ஆம்புலன்ஸை விடுகிறார்கள். அதனபின் ஆம்புலன்ஸ் ஓட்டுநர் தாக்கப்பட்டதாக எடப்பாடி பழனிசாமி மீது வழக்குப் போடப்பட்டுள்ளது. மதுரையில் நடைபெற்ற தவெக இரண்டாவது மாநில மாநாட்டில் ரசிகர் ஒருவரை பவுன்சர் தூக்கிப் போட்டதற்காக விஜய் மீது வழக்குப் போட்டுள்ளனர். காவல்துறையும் அதற்கு ஏற்றார் போல் திமுகவின் கூலிப்படையாக செயல்படுகிறது” என்றார்.