நாட்டுக்காக நிற்பவர்களால்தான் மரங்களின் மாநாட்டை நடத்த முடியும். அற்ப ஓட்டுக்காக நிற்போரால் இந்த மாநாட்டை நடத்த முடியாது என்று சீமான் கூறினார்.
நாம் தமிழர் கட்சியின் சுற்றுச்சூழல் பாசறை சார்பில் மரங்களோடு பேசுவோம், மரங்களுக்காகப் பேசுவோம் என்ற தலைப்பில் திருத்தணி அருகே அருங்குளம் கிராமத்தில் மரங்களின் மாநாடு இன்று நடைபெற்றது. இம்மாநாட்டில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசுகையில், காட்டில் புலிகள் நுழைந்தவுடன் ஒரு அணிலை கூட காணவில்லை. அணில்களுக்கும் சேர்த்துதான் மரங்களின் மாநாடு. நாட்டுக்காக நிற்பவர்களால்தான் இந்த மாநாட்டை நடத்த முடியும். அற்ப ஓட்டுக்காக நிற்போரால் இந்த மாநாட்டை நடத்த முடியாது.
தண்ணீரைத் தொடர்ந்து காற்றையும்கூட இவர்கள் விற்பார்கள். டெல்லியைப் போல தமிழ்நாட்டிலும் சுத்தமான காற்றை குடுவையில் விற்கும் நிலைவரும். காற்று மாசுபட்டு போனதா, இல்லை நாம் காற்றை மாசுபடுத்தி சென்றோமா என யோசித்து செயல்பட வேண்டும். வீசும் நச்சுக்காற்றை மூச்சுக்காற்றாக மாற்றும் மகத்தான பணியை மரங்கள் செய்யும். பூமியை சமநிலைப்படுத்துவதில் மரங்களின் பங்கு அதிகமானது என்பது அறிஞர்களின் கருத்து. ஒரு மரத்தை நட்டாலே ஆண்களும் தாயாக முடியும். மரம் நம் அன்னை, நம் தாய். மரங்கள் வெட்டப்படுவதால் பருவநிலை மாறி வருகிறது என்றார்.