கிழக்கு ஆப்கானிஸ்தானில் நேற்று இரவு ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 622 ஆக உயர்ந்துள்ளது.
கிழக்கு ஆப்கானிஸ்தானில் இந்துகுஷ் மலைப்பகுதியில் நேற்று நள்ளிரவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. பாகிஸ்தானின் எல்லை அருகே அமைந்துள்ள அந்நாட்டின் நகங்கர் மாகாணம் ஜலாலாபாத்தை மையமாக கொண்டு 8 கிலோ மீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.0 ஆக பதிவானது. இந்த பயங்கர நிலநடுக்கத்தால், ஏராளமான வீடுகள் சேதமடைந்தன. குறிப்பாக பர்வான், காபூல், கபிசா, மற்றும் நங்கர்ஹார் மாகாணங்களில் இதன் தாக்கம் அதிகமாக இருந்தது. நிலநடுக்கம் ஏற்பட்டதும் வீடுகள் இடிந்து விழுந்ததில் இதுவரை உயிரிழந்தோர் எண்ணிக்கை 622 ஆகியுள்ளது. இடிபாடுகளுக்குள் சிக்கியிருப்பவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருவதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் அஞ்சப்படுகிறது.
நிலநடுக்கத்தில் சிக்கி காயமடைந்த 1500 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதில் பலரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. நிலநடுக்கத்தால் மிகவும் பாதிக்கப்பட்ட பர்வான், காபூல், கபிசா, மற்றும் நங்கர்ஹார் மாகாணங்களில் மீட்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இடிபாடுகளுக்குள் சிக்கி மாயமானவர்களைத் தேடும் பணி, தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ஏற்கெனவே பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள ஆப்கானிஸ்தானுக்கு இந்த நிலநடுக்கம் மேலும் பேரிடியாக இறங்கியுள்ளது. எனவே, நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ சர்வதேச நாடுகள் மனிதாபிமான உதவிகளை வழங்க வேண்டும் என ஆப்கானிஸ்தான் அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.