அனுமதி இல்லாத செய்திகளை வெளியிடக்கூடாது என்று பத்திரிகையாளர்களுக்கு பென்டகன் விதித்த கட்டுப்பாடுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
அமெரிக்க ராணுவத் தலைமையகமான பென்டகன், ஊடகவியலாளர்களுக்கு ஒரு சுற்றறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில், அமெரிக்க அரசால் வழங்கப்படாத, பாதுகாப்புத்துறை தொடர்பான தகவல்களைமுன் அனுமதி இல்லாமல் வெளியிடமாட்டோம் என உறுதியளிக்குமாறு ஊடகவியலாளர்களை பென்டன்கள் வலியுறுத்தியுள்ளது. மேலும் வெளியிடுவதற்கு அனுமதி பெறாத தகவல்களையும், வகைப்படுத்தப்படாத தகவல்களையும் செய்தியாக வெளியிடுவதைத் தவிர்ப்பதற்கான உறுதிமொழியில் ராணுவத் தலைமையகத்தில் உள்ள செய்தி சேகரிக்கும் அங்கீகரிக்கப்பட்ட பத்திரிகையாளர்கள் கையெழுத்திட வேண்டும் என்று பென்டகன் கூறியுள்ளது.
அமெரிக்க ராணுவ தலைமையகத்தின் இந்த அறிவுறுத்தலைப் பின்பற்றாத பத்திரிகையாளர்கள் பென்டகனுக்குள் நுழைவதற்கான அனுமதியை, அங்கீகாரம் பெற்ற பத்திரிகையாளர்கள் இழக்க நேரிடும் என்று அமெரிக்கா டிரப் நிர்வாகம் வெளியிட்ட ஊடகவியலாளர்களுக்கான சுற்றறிக்கை தெளிவுபடுத்தியுள்ளது.
பென்டகனின் இந்த உத்தரவிற்கு, பத்திரிகையாளர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து அவர்கள் கூறுகையில், இந்த உத்தரவு பென்டகன் மற்றும் அமெரிக்க ராணுவத்தைப் பற்றி செய்தி வெளியிடும் பத்திரிகையாளர்களின் திறனை அடிப்படையில் மாற்றும். இந்த உத்தரவு அமெரிக்க மக்களுக்கு வெளிப்படைத்தன்மையை தடுக்கின்றன. எனவே, இந்த புதிய உத்தரவை டிரம்ப் நிர்வாகம் ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர். இந்த நடவடிக்கை சுயாதீன பத்திரிகையின் மீதான நேரடி தாக்குதல் என்று தேசிய பத்திரிகை கழகம் கண்டித்துள்ளது. அமெரிக்க பத்திரிகையாளர்கள் அதிகாரத்தில் உள்ள கட்சிக்கோ அல்லது பென்டகனுக்கோ வெறும் ஸ்டெனோகிராஃபர்களாக இருக்கக்கூடாது என்று ரீட் கூறியுள்ளார்.