நடிகர் எம்.ஆர்.ராதாவின் மனைவி கீதா ராதா உடல்நலக்குறைவால் காலமானார். அவரது மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
பழம்பெரும் நடிகர் எம்.ஆர்.ராதாவின் மனைவியும், நடிகைகள் ராதிகா சரத்குமார், நிரோஷாவின் தாயாருமான கீதா ராதா நேற்று இரவு உடல் நலக் குறைவால் காலமானார். அவருக்கு வயது 86. இதுகுறித்து நடிகை ராதிகா வெளியிட்டுள்ள அறிக்கையில், ” “மறைந்த நடிகவேள் எம்.ஆர்.ராதாவின் மனைவியும், எனது தாயாருமான கீதா ராதா உடல் நலக்குறைவு மற்றும் வயது மூப்பு காரணமாக காலமானார் என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம். அவரின் உடல் இறுதி மரியாதை செலுத்துவதற்காக போயஸ் கார்டனிலுள்ள இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது. அன்னாரது இறுதி சடங்கு மாலை 4.30 மணிக்கு மேல் பெசன்ட் நகர் மின்மயானத்தில் நடைபெறும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்” என்று கூறப்பட்டுள்ளது.
கீதா ராதாவின் மறைவுக்கு நடிகர்கள் பிரபு, நாசர் உள்ளிட்ட ஏராளமான திரைத்துறையினர் அவரின் உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். கீதா ராதா மறைவிற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்தி குறிப்பில், “நடிகவேள் எம்.ஆர்.ராதாவின் மனைவி கீதா ராதாவின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். அவரது பிரிவால் வாடும் சகோதரி ராதிகா சரத்குமார் உள்ளிட்ட குடும்பத்தினருக்கும், உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கும் ஆறுதல் தெரிவித்துக் கொள்கிறேன்” என கூறப்பட்டுள்ளது.
தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது சமூக வலைதளப்பக்கத்தில், ‘நடிகவேள்’ எம்.ஆர்.ராதா அவர்களின் துணைவியார் கீதா ராதா உடல்நலக்குறைவால் மறைந்த செய்தியறிந்து வருந்தினோம். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுடன் கீதா ராதா அம்மையாரின் இல்லம் சென்று, அவர்களின் திருவுடலுக்கு மாலை அணிவித்து மரியாதைச் செலுத்தினோம். அன்னையாரை இழந்து வாடும் திரைக்கலைஞர்கள் ராதிகா சரத்குமார், நிரோஷா உள்ளிட்ட அவர்களின் குடும்பத்தார், நண்பர்களுக்கு ஆறுதலைத் தெரிவித்தோம் என்று பதிவிட்டுள்ளார்.