ஜி.கே. மூப்பனாரை பிரதமராக முடியாமல் தடுத்தனர் என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசியுள்ளார்.
தமிழ் மாநில காங்கிரஸ் (தமாகா) நிறுவனர் ஜி.கே. மூப்பனாரின் 24-வது ஆண்டு நினைவு தினம் இன்று கடைபிடிக்கப்பட்டது. இதனை முன்னிட்டு சென்னை தேனாம்பேட்டையில் உள்ள மூப்பனார் நினைவிடத்தில் தலைவர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
இதனைத் தொடர்ந்து, ஜி.கே.மூப்பனார் நினைவேந்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, பாஜக. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை, தேமுதிக பொருளாளர் எல்.கே.சுதீஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசுகையில், ஜி.கே.மூப்பனாரை பிரதமராக முடியாமல் தடுத்தவர்கள் யார் என்று நம் அனைவருக்கும் தெரியும் . இன்று தமிழ், தமிழ் என்று பேசுபவர்கள், ஒரு தமிழரை பிரதமராக விடாமல் தடுத்தனர் என்றும் பேசினார். அதிமுக கூட்டணியில் இருந்த தேமுதிகவிற்கு மாநிலங்களையில் போட்டியிடும் வாய்ப்பு தரப்படவில்லை. அதனால் தேமுகதி தற்போது திமுகவுடன் நட்பு பாராட்டி வருகிறது. இந்த நிலையில், தேசிய ஜனநாயக கூட்டணி தலைவர்கள் பங்கேற்ற நிகழ்ச்சியில் தேமுதிக பொருளாளர் எல்.கே.சுதீஷும் பங்கேற்றதால், வரும் சட்டமன்றத் தேர்தலில் இந்த கூட்டணியில் தேமுதிக இடம் பெறுகிறதா என்ற கேள்வி எழுந்தது. இது தொடர்பாக செய்தியாளர்கள் வினா எழுப்பினர். அப்போது பாஜக கூட்டணியில் தேமுதிக இடம்பெறுமா என்று கேள்விக்கு, நட்பின் காரணமாக நினைவேந்தல் நிகழ்ச்சியில் பங்கேற்றதாக எல்கே.சுதீஷ் பதில் அளித்தார்.