கரூர் தவெக பிரச்சார கூட்டத்தில் 41 பேர் உயிரிழந்த சம்பவத்திற்கு அக்கட்சியின் தலைவர் விஜய் தாமதமாக கூட்டத்திற்கு வந்து தான் காரணம் என சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.

சட்டமன்றத்தில் முதல்வர் பேச்சு :-
நீண்ட நாட்களுக்கு பிறகு இன்று தமிழக சட்டமன்றம் கூடியது. சட்டமன்ற கூட்டம் ஆரம்பித்தது முதல் கரூர் சம்பவம் தான் பெரும் சர்ச்சையாக வெடித்தது. காரசார விவாதமும் ஆனது.
எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியும் கரூர் சம்பவம் குறித்து பல்வேறு கேள்விகளை சட்டமன்றத்தில் எழுப்பினார். மேலும், இச்சம்பவத்திற்கு திமுகவின் அலட்சியம் தான் காரணம் என குற்றம்சாட்டினார். இது அவையில் சலசலப்பை ஏற்படுத்தியது. அதற்கு முதல்வர் ஸ்டாலின் சட்டமன்றத்தில் விரிவாக தனது பதிலை அளித்தார்.

முதல்வர் ஸ்டாலினின் குற்றச்சாட்டுகள்:-
அவர் பேசியதாவது, கரூர் வேலுச்சாமிபுரத்தில் கூட்டம் நடத்த தவெக அனுமதி கோரி கொடுத்த கடிதத்தில், மாலை 3 மணி முதல் இரவு 10 மணி வரை என்று குறிப்பிட்டிருந்தார்கள்.
ஆனால், செய்தியாளர் சந்திப்பு மற்றும் சமூக ஊடகங்களில் மதியம் 12 மணிக்கு கட்சித்தலைவர் விஜய், கரூர் வருவதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தெரிவித்திருந்தார்.

இதனால், மக்கள் காலை முதலே வரத்தொடங்கி விட்டனர். 27.09.2025 அன்று அக்கட்சியின் தலைவர் சென்னையில் இருந்து காலை 8.40 மணிக்கு புறப்பட்டு 9.25 மணிக்கு திருச்சி சென்றடைந்தார்.
நாமக்கல் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பிறகு கரூருக்கு இரவு 7 மணிக்கு வந்துள்ளார். அறிவிக்கப்பட்ட 12 மணியை, கடந்து 7 மணி நேரம் கழித்துதான் கூட்டத்திற்கு தாமதமாக வந்தார்.
தவெக தலைவர் விஜய் தான் காரணம்:-
எனவே தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்யின் தாமதமாக கூட்டத்திற்கு வந்தது தான், கூட்ட நெரிசலில் பல உயிரிழக்கவும்; பெரும் அசம்பாவிதம் ஏற்படவும் காரணமாக அமைந்ததாக சட்டமன்றத்தில் முதல்வர் ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.
