மதுரை மாநகராட்சி வரி முறைகேடு விவகாரத்தில் முதலமைச்சர் நடவடிக்கை எடுப்பார் என்று துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்..
மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மாவட்ட வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து அனைத்து துறை அரசு அதிகாரிகளுடன் தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று ஆலோசனை மேற்கொண்டார்.இந்த கூட்டத்திற்கு பிறகு துணை முதலமைச்சர் செய்தியாளர்களிடம் கூறுகையில், “மதுரை மாவட்டத்தில் நடைபெற்ற வரும் அரசு திட்டப்பணிகள் குறித்து மேற்கொள்ளப்பட்டது. அரசின் பல்வேறு திட்டப் பணிகள் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது, ஒரு சில திட்டப் பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது. அப்பணிகளை விரைவாக முடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் முதன்முறையாக உலகக்கோப்பை ஜூனியர் ஹாக்கி போட்டிகள் நவம்பர் 28 முதல் டிசம்பர் 10-ம் தேதி வரை நடைபெறுகிறது. உலகெங்கும் இருந்து 29 அணிகள் இப்போட்டியில் பங்கேற்று விளையாட உள்ளன. முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டியில் பிறமாநில விளையாட்டு வீரர்களை விளையாடக் கூடாது என சொல்ல முடியாது. பிற மாநிலங்களைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள் தமிழகத்தில் தங்கிப்படிக்கும் போது அவர்களை விளையாட்டு போட்டிகளில் விளையாட அனுமதிக்கலாம்.
முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகளில் ஒவ்வொரு ஆண்டும் சரியான வழிமுறைகள் பின்பற்றப்பட்டு போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது. விளையாட்டு வீரர்களுக்கான தகுதி, திறமைகள் இருக்கும் பட்சத்தில் முதலமைச்சர் விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்க அனுமதிக்கப்படுகிறது. மதுரை மாநகராட்சி வரி முறைகேடு விவகாரத்தில் முதலமைச்சர் நடவடிக்கை எடுப்பார்” என்றார்.
இந்த கூட்டத்தில் அமைச்சர்கள் பெ.மூர்த்தி,பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், , அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் பிரதீப் யாதவ், அரசு கூடுதல் செயலாளர் உமா, மாவட்ட ஆட்சியர் பிரவீன்குமார், மாநகராட்சி ஆணையாளர் சித்ரா விஜயன், நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் மாநகர காவல் ஆணையாளர் லோகநாதன் மற்றும் எம்எல்ஏக்கள் உள்ளிட்ட அனைத்து துறை அதிகாரிகளும் கலந்து கொண்டுள்ளனர்.
