கடலூரில் மின்னல் தாக்கி 4 பெண்கள் பலி – நயினார் நாகேந்திரன் இரங்கல்!

கடலூரில் மின்னல் தாக்கி 4 பேர் உயிரிழந்ததற்கு பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் இரங்கல் தெரிவித்துள்ளார்.

கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே உள்ள கழுதூர் கிராமத்தைச் சேர்ந்த பெண்கள், அப்பகுதியில் உள்ள வயலில் களை எடுத்துக் கொண்டிருந்தனர். அப்போது திடீரென மின்னல் தாக்கியதில் வயலில் வேலை செய்து கொண்டிருந்த பாரிஜாதம், ராஜேஸ்வரி, சின்னப்பொண்ணு, கணிதா ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

மேலும், தவமணி என்பவர் படுகாயத்துடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மின்னல் தாக்கி 4 பெண்கள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இச்சம்பவத்திற்கு பாஜக தமிழ்நாடு மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவரது எக்ஸ் தளத்தில், “கடலூர் மாவட்டம் கழுதூர் கிராமத்தில் விவசாய நிலத்தில் வேலை செய்து கொண்டிருந்த கனிதா, சின்னப்பொன்னு, ராஜேஸ்வரி, பாரிஜாதம் ஆகிய 4 பெண்கள், மின்னல் தாக்கியதில் உயிரிழந்ததாக வரும் செய்தி மிகுந்த வேதனையளிக்கிறது.

உயிரிழந்தவர்களின் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்களையும் வருத்தங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். அத்தோடு, உயிரிழந்த பெண்களின் குடும்பத்திற்குத் தக்க நிவாரணம் வழங்கவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை கேட்டுக்கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *