தமிழகத்தை ஆண்டு கொண்டிருப்பவர் ஒரு பொம்மை முதலமைச்சர் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தமிழகம் முழுவதும் மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம் என்ற பெயரில் பரப்புரை மேற்கொண்டு வருகிறார். கூடலூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் இன்று அவர் பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசுகையில், திமுக ஆட்சிக்கு வந்து 4 ஆண்டுகள் முடிந்து 5வது ஆண்டில் அடி எடுத்து வைத்துள்ளது. ஆனால், இந்த நான்கு ஆண்டு காலத்தில் கூடலூர் தொகுதி மக்களுக்கு எவ்வித பெரிய திட்டமும் கொண்டு வரவில்லை. ஆனால், மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா ஆட்சியில் அரசு கலைக்கல்லூரியை கொண்டு வரப்பட்டது.
அதே போல அதிமுக அரசு நீலகிரி மாவட்ட மக்களின் கோரிக்கையை ஏற்று உதகையில் பிரம்மாண்டமான அரசு மருத்துவக் கல்லூரியை கொண்டு வந்து மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றியது ஆனால், ஆட்சி மாற்றம் காரணமாக திமுக அரசு ஆட்சிக்கு வந்தது. அவர்கள் அந்தப் பணியை நிறைவு செய்து அவர்களது ஆட்சியில் வந்ததைப் போல ஸ்டிக்கர் ஒட்டி திறப்பு விழா கண்டனர். தான் பெற்ற பிள்ளைக்கு திமுக பெயர் வைத்து விட்டது.
தமிழகத்தில் 21 பாலிடெக்னிக் கல்லூரிகள், நான்கு பொறியியல் கல்லூரிகள், நான்கு வேளாண்மை கல்லூரிகள், ஐந்து கால்நடை மருத்துவ கல்லூரி, ஆராய்ச்சி நிலையங்கள், ஆசியாவிலேயே மிகப்பெரிய கால்நடை பூங்கா ஆயிரம் கோடி மதிப்பீட்டில் 1500 ஏக்கர் பரப்பளவில் சேலம் மாவட்டத்தில் கொண்டு வந்து சாதனை படைத்தோம். ஆனால் அதனை திறக்க மனமில்லாத அரசாங்கம் திமுக அரசு கல்விக்கு அதிக நிதி ஒதுக்கியது அதிமுக ஆட்சியில் தான். திமுக ஆட்சியில் ஏதாவது ஒரு மருத்துவ கல்லூரியுடன் கூடிய மருத்துவமனை கொண்டு வரப்பட்டதா? தமிழகத்தை ஆண்டு கொண்டிருப்பவர் ஒரு பொம்மை முதலமைச்சர்.
விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் நேற்று நடைபெற்ற பூத் கமிட்டி கூட்டத்தில் உதயநிதி ஸ்டாலின் பேசியுள்ளார். நாட்டிலேயே ரோல் மாடல் ஆட்சி செய்வது ஸ்டாலினாம். இந்தியாவிலேயே அதிக கடன் வாங்குவதில் ரோல் மாடல் ஆட்சி செய்வது ஸ்டாலின் தான். இந்தியாவிலேயே கடன் வாங்குவதிலேயே முதல் மாநிலமாக தமிழ்நாடு தான் ரோல் மாடலாக இருக்கிறது.. ஊழல், கலெக்சன், கமிஷன், கரப்ஷன், ரோல் மாடலாக திமுக அரசாங்கம் இருக்கிறது. அதேபோல் டாஸ்மாக் கலெக்சனில் பத்து ரூபாய் கூடுதலாக வாங்குவதில் ரோல் மாடலாக உள்ளது. குடும்ப ஆட்சி, வாரிசு அரசியலுக்கு ரோல் மாடலாக இருப்பது திமுக தான் என்று பேசினார்.