தேசியகீதம் எழுதப்பட்ட மொழிக்கு ஏற்பட்ட அவமானம்- மு.க.ஸ்டாலின் கண்டனம்

வங்க மொழியை வங்கதேச தேசிய மொழி என்று டெல்லி காவல்துறை குறிப்பிட்ட விவகாரத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

டெல்லி காவல்துறையால் எழுதப்பட்ட ஒரு கடிதத்தை மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, தன்னுடைய சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். அது டெல்லி காவல்துறை மேற்கு வங்க விருந்தினர் இல்லமான வங்கா பவனுக்கு எழுதிய கடிதமாகும். அந்த கடிதத்தில் காவல்துறை, சட்டவிரோதமாக நாட்டுக்குள் நுழைந்த எட்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றும், அவர்களிடம் விசாரணை நடத்த மொழிபெயர்ப்பாளர்கள் தேவை என்று தெரிவித்திருந்தது.

அந்த கடிதத்தில் காவல்துறை வங்க மொழியை வங்கதேச தேசிய மொழி என்று குறிப்பிட்டுருந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த மம்தா பானர்ஜி டெல்லி காவல்துறை, வங்க மொழியை வங்கதேச மொழி என்று குறிப்பிட்டதற்கு கண்டனத்தைப் பதிவு செய்திருக்கிறார். ஆனால் பாஜக, இது அரசியல் ஆதாயத்துக்காக மம்தா பானர்ஜி செய்யும் வேலை என்று குற்றம் சாட்டியிருக்கிறது.

இந்த நிலையில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து மம்தா பானர்ஜியின் பதிவை மேற்கோள் காட்டி அவரது எக்ஸ் தளபதிவில், “மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் உள்ள டெல்லி காவல்துறை, வங்காள மொழியை “வங்காள மொழி” என்று குறிப்பிட்டுள்ளது . இது நமது தேசிய கீதம் எழுதப்பட்ட வங்க மொழிக்கே ஏற்பட்ட நேரடி அவமானம். இதுபோன்ற அறிக்கைகள் தற்செயலான பிழைகள் அல்லது தவறுகள் அல்ல. பன்முகத்தன்மையை தொடர்ந்து குறைமதிப்பிற்கு உட்படுத்தும் மற்றும் அடையாளத்தை ஆயுதமாக்கும் ஒரு ஆட்சியின் இருண்ட மனநிலையை அவை அம்பலப்படுத்துகின்றன. இந்தி அல்லாத மொழிகள் மீதான இந்த தாக்குதலை எதிர்கொள்ளும் போது, மம்தா பானர்ஜி வங்காள மொழிக்கும் மேற்கு வங்க மக்களுக்கும் ஒரு கேடயமாக நிற்கிறார். பொருத்தமான பதிலடி இல்லாமல் இந்த தாக்குதலை அவர் கடந்து செல்ல விடமாட்டார்” என்று தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *