ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை சிபிஐக்கு மாற்றக்கோரிய மனுவிற்கு தமிழக அரசு பதில் அளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னையில் கடந்த 2024 ஜூலை 5-ம் தேதி பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொடூரமாக கொலை செய்யப்பட்டார். இவ்வழக்கில் இதுவரை 27 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த வழக்கின் விசாரணை சென்னை முதன்மை அத்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இவ்வழக்கு விசாரணையை சிபிஐக்கு மாற்றக்கோரி ஆம்ஸ்ட்ராங்கின் மனைவி பொற்கொடி மனுதாக்கல் செய்துள்ளார். இம்மனுவில், ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு விசாரணையில் ஆளுங்கட்சி தலைவர்கள் தலையிட்டுள்ளதால் சிபிஐக்கு மாற்ற வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
இவ்வழக்கு விசாரணை சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது சிபிஐ விசாரணை கேட்ட இம்மனுவை ஏற்கக்கூடாது என்று தமிழக அரசு சார்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இவ்வழக்கை விசாரித்த நீதிபதி, சிபிஐ விசாரணை கோரி பொற்கொடி தாக்கல் செய்த மனு குறித்து அக்.20-ம் தேதிக்குள் தமிழக அரசு மற்றும் காவல் துறை பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டார்.