பட்டாசு ஆலையில் ஏற்பட்ட பயங்கர வெடிவிபத்தில் 6 பேர் உயிரிழந்தனர். மேலும் இருவர் படுகாயமடைந்தனர்.
ஆந்திர பிரதேசத்தின் டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் கோனசீமா மாவட்டத்தில் ராயவரம் மண்டலத்திற்குட்பட்ட குமரிபாலம் கிராமத்தில் பட்டாசு ஆலை இயங்கி வந்தது. இந்த பட்டாசு ஆலையில் இன்று திடீரென பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது. இதனால் பட்டாசுகள் வெடித்து சிதறியதில் 6 தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் இருவர் படுகாயமடைந்தனர். வெடிவிபத்து காரணமாக அந்த பகுதி முழுவதும் கரும் புகை மண்டலமாக மாறியது.இந்த வெடி விபத்தில் பட்டாசு ஆலை வெளியே நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களும் தீப்பிடித்து எரிந்தன.
இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த தீயணைப்புத்துறை மீட்பு படையினர் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். காயமடைந்த இருவரையும் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். உயிரிழந்த 6 பேரின் உடல்களை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். உரிமம் பெற்று பட்டாசு தயாரித்த ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 6 பேர் உயிரிழந்ததாகவும், இருவர் படுகாயமடைந்ததாக மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் ராகுல் மீனா தெரிவித்தார்.
பட்டாசு ஆலை வெடிவிபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஆந்திர பிரதேச முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட பதிவில், வெடி விபத்தில் பலர் பலியான சம்பவம் ஆழ்ந்த வருத்தம் தருகிறது. வெடிவிபத்திற்கான காரணம் குறித்து அதிகாரிகளிடம் பேசி கேட்டறிந்துள்ளேன். காயமடைந்தவர்களுக்கு சிறந்த மருத்துவ உதவிகளை வழங்கும்படியும் அறிவுறுத்தி உள்ளேன். பாதிக்கப்பட்ட குடும்பத்தினருடன் நாங்கள் துணையாக இருப்போம் என்று கூறியுள்ளார்.
