ஜம்மு- காஷ்மீரில் உள்ள தோடா பகுதியில் இன்று ஏற்பட்ட மேகவெடிப்பு மற்றும் திடீர் வெள்ளப்பெருக்கால் நான்கு பேர் உயிரிழந்துள்ளனர். பலர் காணாமல் போனதாக கூறப்படுகிறது.
ஜம்மு-காஷ்மீரின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. கடந்த சில நாட்களாகவே உத்தராகண்ட், இமாச்சலப் பிரதேசம், அருணாச்சலப் பிரதேசம், ஜம்மு – காஷ்மீர் உள்ளிட்ட மலைப்பிரதேசங்களில் அடிக்கடி நிலச்சரிவுகள் மற்றும் மேக வெடிப்புகள் ஏற்பட்டு பெரும் சேதத்தை உருவாக்கி உள்ளன. இதனால் உயிரிழப்புகளும் ஏற்பட்டுள்ளன. காண்டோ, தாத்ரி மற்றும் ராம்பன் ஆகிய பகுதிகள் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில், ஜம்மு- காஷ்மீரில் மீண்டும் இன்று மேகவெடிப்பு ஏற்பட்டுள்ளது. தோடா மாவட்டத்தில் காண்டோ பகுதியில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதில் ஒருவர் உயிரிழந்தார். பலர் காணாமல் போனதாக கூறப்படுகிறது. தோடா பகுதியில் உள்ள டான்டா மற்றும் தாத்ரி பகுதிகளில் தொடர் கனமழை காரணமாக மூன்று பேர் உயிரிழந்துள்ளனர். ஆறுகளில் தண்ணீர் அபாய எல்லையைத் தாண்டி செல்வதால் பல இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. எனவே, பாதுகாப்பான பகுதிகளுக்கு மக்கள் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேகவெடிப்பு மற்றும் கனமழையால் தோடா பகுதியில் சுமார் 10 வீடுகள் முழுமையாக சேதமடைந்துள்ளன. இந்த பகுதியில் சாலைகள் அடித்துச் செல்லப்பட்டதாக உள்ளூர் பேரிடர் மேலாண்மை அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் காணாமல் போனவர்களைத் தேடும் பணியில் அவர்கள் ஈடுபட்டுள்ளனர்.