கொல்கத்தாவில் நேற்று இரவு பெய்த கனமழையால் 5 பேர் பலியாகினர். மேலும் சாலை, ரயில் மற்றும் விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன.
மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தாவில் நேற்று இரவு பெய்த கனமழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டது. கனமழை காரணமாக 5 பேர் உயிரிழந்துள்ளனர். அத்துடன் சாலைகள் வெள்ளத்தில் மூழ்கின. மேலும் ரயில் மற்றும் மெட்ரோ சேவைகள் பாதிக்கப்பட்டன. ஏராளமான குடியிருப்புப் பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின,
வடகிழக்கு வங்காள விரிகுடாவில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி தெற்கு வங்காளத்தின் பல மாவட்டங்களுக்கு மேலும் கனமழை பெய்யக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் (ஐஎம்டி) எச்சரித்துள்ளது. கொல்கத்தா நகரத்தில், காரியா கம்தஹாரியில் இன்று சில மணி நேரத்தில் 332 மி.மீ மழை பதிவாகியுள்ளது, அதே நேரத்தில் ஜோத்பூர் பூங்காவில் 285 மி.மீ மழையும், காளிகாட்டில் 280 மிமீ மழையும் பதிவாகியுள்ளன.
கொல்கத்தா மெட்ரோ ரயில்வேயின் ப்ளூ லைன் (தட்சிணேஸ்வர்-ஷாஹீத் குதிராம்) சேவைகள், குறிப்பாக மகாநாயக் உத்தம் குமார் மற்றும் ரவீந்திர சரோவர் நிலையங்களுக்கு இடையே தண்ணீர் தேங்கியதால் ரயில்கள் நிறுத்தப்பட்டன. பயணிகள் பாதுகாப்பிற்காக ஷாஹீத் குதிராம் மற்றும் மைதான நிலையங்களுக்கு இடையே சேவைகள் நிறுத்தப்பட்டதாகவும், தட்சிணேஸ்வரில் இருந்து மைதானத்திற்கு குறிப்பிட்ட அளவு சேவைகள் இயக்கப்பட்டதாகவும் மெட்ரோ செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார். வழக்கமான சேவைகள் விரைவில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தண்டவாளங்களில் தண்ணீர் தேங்கியதால் சீல்டா தெற்குப் பிரிவில் ரயில் சேவை முற்றிலுமாக நிறுத்தப்பட்டுள்ளதாக கிழக்கு ரயில்வே அதிகாரி ஒருவர் தெரிவித்தார். ஹவுரா மற்றும் கொல்கத்தா டெர்மினல் நிலையங்களிலிருந்து வரும் ரயில்களும் பாதிக்கப்பட்டன, மேலும் சித்பூர் யார்டில் தண்ணீர் தேங்கியதால் சர்குலர் ரயில் பாதையில் உள்ள ரயில்களும் நிறுத்தப்பட்டன.
நகர சாலைகளில் அதிக தண்ணீர் தேங்கியதால் போக்குவரத்து முற்றிலுமாக ஸ்தம்பித்தது. பொது போக்குவரத்து இல்லாதது மற்றும் போக்குவரத்து நெரிசல்கள் காரணமாக அலுவலகத்திற்குச் செல்வோர் கடும் சிரமத்தை எதிர்கொண்டனர். கனமழை மற்றும் தண்ணீர் தேங்கியதால் பல பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கிடையில் நாளை (செப்டம்பர் 24) வரை தெற்கு வங்காள மாவட்டங்களான புர்பா மற்றும் பஸ்சிம் மெடினிபூர், தெற்கு 24 பர்கானாஸ், ஜார்கிராம் மற்றும் பங்குராவில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், நாளை மறுநாள் (செப்டம்பர் 25) கிழக்கு-மத்திய மற்றும் வடக்கு வங்காள விரிகுடாவில் மற்றொரு குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, இது மழையை இன்னும்தீவிரப்படுத்தக்கூடும் என்று தெரிகிறது.
கனமழையைக் கருத்தில் கொண்டு விமான நிறுவனமான இண்டிகோ ஏர்லைன்ஸ் அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில், “உங்களுக்கு ஒரு சுமூகமான பயணத்தை உறுதி செய்ய நாங்கள் எல்லா முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறோம் ” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.