அதிமுக முன்னாள் அமைச்சர் மீது நடிகை வழக்கு- உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு

அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டனின் ஜாமீனை ரத்து செய்யக்கோரி நடிகை சாந்தினி தொடர்ந்த வழக்கை உச்சநீதிமன்றம்  தள்ளுபடி  செய்துள்ளது.

கடந்த அதிமுக ஆட்சியில் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சராக இருந்தவர் மணிகண்டன். இவர் மீது நடிகை சாந்தினி என்பவர் பாலியல் புகார்கள் கூறியதால் பரபரப்பு ஏற்பட்டது. அவரது புகாரில், தன்னுடன் மணிகண்டன்  ஐந்து ஆண்டுகள் வாழ்ந்து  வந்ததாகவும், அதன் காரணமாக தான் மூன்று முறை கர்ப்பமடைந்ததாகவும், திருமணம் செய்து  கொள்வதாகக் கூறியதைத் தொடர்ந்து கர்ப்பத்தைக் கலைத்ததாகவும், ஆனால் திருமணம் செய்துகொள்ளாமல் தன்னை ஏமாற்றிவிட்டதாகவும் சென்னை காவல் ஆணையரிடம் 2011-ம் ஆண்டு புகார் மனு அளித்தார். மலேசியாவை சேர்ந்த நடிகை சாந்தினி நாடோடிகள் உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார்.

இதன் அடிப்படையில் அடையாறு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அமைச்சர் மணிகண்டன் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் முன் ஜாமீன் கேட்டு மணிகண்டன் தாக்கல் செய்த மனுவை முதலில் மாவட்ட நீதிமன்றம், பின்னர் சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

இந்த நிலையில், பெங்களூருவில் தலைமறைவாக இருந்த மணிகண்டனை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர். அதன்பின் ஜாமீனில் வெளியில் வந்தார். இந்நிலையில் கடந்த நான்கு  மாதங்களுக்கு முன் மணிகண்டனும், நடிகை சாந்தினியும் சமரசம் செய்து கொண்டனர். அதனடிப்படையில் மணிகண்டன் மீதான வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது.

இந்த நிலையில் அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டனுக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்யக்கோரி நடிகை சாந்தினி உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். மணிகண்டன் தனக்குச் சில ஒப்பந்தங்கள் செய்து கொடுத்ததாகவும், ஆனால் அதைச் செய்து கொடுக்காமல் வழக்கை நான் வாபஸ் பெற்று, அவர் விடுவிக்கப்பட்டதிலிருந்து தன்னைச் சந்திக்காமல் தலைமறைவாகிவிட்டதாகவும் நடிகை சாந்தினி குற்றம்சாட்டினார்.

இவ்வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கை விசாரித்த நீதிபதிகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் சமரசம் செய்யப்பட்டுவிட்டதாக தமிழ்நாடு அரசு தகவல் சொன்ன நிலையில், அதற்கு நடிகை தரப்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டது. இருந்தாலும் சென்னை  உயர்நிதிமன்ற உத்தரவை எதிர்த்து ஏன் மனு தாக்கல் செய்யவில்லை என்று கேள்வி எழுப்பிய நீதிபதிகள்,  அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டனின் ஜாமீனை எதிர்த்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *