சட்டமன்றத் தேர்தலில் தவெக, திமுக இடையே தான் போட்டி என்று தவெக தலைவர் விஜய் மீண்டும் கூறியுள்ளார்.
சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் தவெக சிறப்பு பொதுக்குழு கூட்டம் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் தவெக தலைவர் விஜய் பேசுகையில், ” குடும்ப உறவுகளை இழந்ததால், சொல்லொணா வேதனையிலும் வலியிலும் இவ்வளவுநாளாக இருந்தோம். அத்தகைய சூழலில், நம் சொந்தங்களின் மனம்பற்றி இரு க்க வேண்டியது நம் கடமை. அதனால்தான் அவர்களுடன் சேர்ந்து அமைதி காத்து நின்றோம். இதற்கிடையில் வன்ம அரசியல் வலைகள் நம்மைச் சுற்றிப் பின்னப்பட்டன என்பதை நீங்கள் அறிவீர்கள். அர்த்தமற்ற அவதூறுகளும் பரப்பப்பட்டன. இதையெல்லாம் சட்டம் மற்றும் சத்தியத்தின் துணைகொண்டு துடைத்து எறியத்தான் போகிறோம். பட் அதுக்கு முன்னாடி, தமிழக சட்டமன்றத்தில் நமக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட ஓர் உரைக்கு ஒரு நாகரிக பதிலடி நாம் கொடுக்கனும்னு நினைக்கிறேன்.
அரசியல் செய்ய விரும்பவில்லை என்று அடிக்கடி கூறும் தமிழக முதல்வர், 15.10.2025 அன்று சட்டமன்றத்தில் நமக்கெதிராக பேசிய பேச்சில் எவ்வளவு வன்மத்தை கக்கியுள்ளார் என்பதையும் அவர் எப்படிப்பட்ட அரசியலை செய்ய முயல்கிறார் என்பதையும் மக்கள் உணராமலா இருக்கின்றனர்?. கரூருடன் சேர்ந்து 5,6 மாவட்டங்களில் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடத்தி இருக்கிறோம். கடைசி நாள்வரை அந்த இடம் தருவாங்களா? இந்த இடம் தருவாங்களான்னு அழைகழிப்பாங்க.
இந்தியாவில் எந்த ஒரு அரசியல் தலைவருக்கும் இல்லாத அளவில், பிரச்சார வாகனத்துக்கு உள்ளேயே இருந்துதான் மக்களைப் பார்க்க வேண்டும். வாகனத்துக்கு மேலே வந்து கைகாட்டக் கூடாது என்பன போன்ற அதீதக் கட்டுப்பாடுகளை நமக்கு மட்டுமே விதித்ததை எதிர்த்து நாம் அறிக்கை ஒன்றையும் வெளியிட்டதோடு, நம் கழகம் சார்பாக அனைத்து கட்சிகளுக்கும் சமமாக, முறையான ஒரு பொது வழிகாட்டு முறைகளுடன் கூடிய அனுமதியை நமக்கும் வழங்க வலியுறுத்தி சென்னை உயர்நீதிமன்றத்தையும் நாடியிருந்தோம் இதையும் தமிழக மக்கள் உணராமலா இருப்பாங்க?
பொய்மூட்டைகளை அவதூறுகளாக நம்மீது அவிழ்த்துவிட முதல்வர் அவர்களுக்கு, அவரின் வெற்று விளம்பர மாடல் திமுக அரசின் சார்பாகக் கோடிகளைக் கொட்டி அமர்த்தப்பட்ட அறிவார்ந்த வழக்கறிஞர்களே, கபடநாடக திமுக அரசின் தில்லுமுல்லுகளைத் தாங்கிப் பிடிக்க இயலாமல், உச்ச நீதிமன்றத்தில் திக்கித் திணறி நின்றது முதல்வர் அவர்களுக்கு மறந்துவிட்டதா?. கரூர் சம்பவத்திற்கு அப்புறமாக அவசர அவசரமாக ஒரு தனிநபர் ஆணையம்.. அந்த ஆணையத்தையே அவமதிப்பதுபோல அரசு உயர் அதிகாரிகள் மற்றும் காவல்துறை உயர் அதிகாரிகளை வைத்து, நம் மீதும் அவதூறு பரப்பி செய்தியாளர் சந்திப்பை அவசரமாக நடத்தியது ஏன் என்று தமிழக மக்கள் கேள்வி கேட்டதை முதல்வர் மறந்துட்டாரா? அந்த ஆணையத்தை குட்டி உட்கார வெச்சுட்டாங்க..
மனிதாபிமானம், அரசியல் அறம், மாண்பு என எதுவுமே இல்லாமல் அரசியல் ஆதாய ஆட்டத்தை ஆடத் தொடங்கிவிட்டார் முதல்வர் அவர்கள். 1969-ம் ஆண்டுக்குப் பிறகு அவங்க கைக்கு கட்சிக்கு வந்தப்ப, அதிலும் குறிப்பாக 1972க்குப் பிறகான திமுக இப்படித்தான். இந்த கேள்விகள் எல்லாம் உங்கள் மீது நம்பிக்கை இல்லை என்று கூறுவது எதைக்காட்டுகிறது என்பது முதல்வருக்குப் புரிகிறதா?. உச்சநீதிமன்றத்திலும் மட்டுமல்ல மக்கள் மன்றத்திலும் இந்த அரசு மீதான நம்பிக்கை மண்ணுக்குள் புதைந்துவிட்டது என்பதாவது புரிகிறதா முதல்வருக்கு?. புரியவில்லை எனில், வருகிற 2026 தேர்தல் வாயிலாக தி.மு.க தலைமை ஆழமாக உணரும் வகையில் மக்கள் மன்றம் அவர்களுக்கு அழுத்தமாகப் புரிய வைக்கும். அப்போதும்கூட ‘மக்கள் தீர்ப்புக்குத் தலைவணங்குகிறோம்’ என்று பழக்கதோஷத்தில் அறிக்கை வெளியிடுவாங்க.. அப்படி அறிக்கையை வெளியிட்டு அறிவாலயத்துல போய் ஓடி ஒளிஞ்சுக்குவாங்க.. அந்த அறிக்கையை இப்பவே ரெடி செஞ்சு வைச்சுக்குங்க..
இப்பவும் சொல்றேன்.. 2026 சட்டமன்றத் தேர்தலில் இண்டே இரன்டு பேருக்கு இடையேதான் போட்டி.. ஒன்று டிவிகே, இன்னொன்று திமுக. நூறு வெற்றி நிச்சயம்.. வாகை சூடுவோம். வரலாறு படைப்போம். நல்லதே நடக்கும்” என்றார்.
