அதிமுக-பாஜக கூட்டணியை தமிழக மக்கள் விரும்பவில்லை- முதல்வர் ஸ்டாலின் பேச்சு

அதிமுக-பாஜக கூட்டணியை தமிழக மக்கள் விரும்பவில்லை. அவர்களின் கட்சிக்காரர்களும் விரும்பவில்லை என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

தமிழ்நாட்டில் 2026-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த நிலையில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மாமல்லபுரத்தில் ‘என் வாக்குச்சாவடி – வெற்றி வாக்குச்சாவடி’ என்ற பயிற்சிக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மாநிலம் முழுவதும் இருந்து திமுகவினர் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில் முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் பேசுகையில், ” நம்முடைய இயக்கம் எந்நாளும் தொடர்ந்து இயங்கிக் கொண்டே இருப்பதற்கு அடித்தளமான உங்களை நம்பி, ‘என் வாக்குச்சாவடி, வெற்றி வாக்குச்சாவடி’ என்ற முழக்கத்தை முன்னெடுத்திருக்கோம். உங்களுடைய உழைப்பால, ஆறாவது முறையாக ஆட்சிப் பொறுப்பில் உள்ள நாம், அடுத்து ஏழாவது முறையாவும் ஆட்சி அமைக்க வேண்டும். அதுக்குத்தான் இந்தப் பயிற்சிக் கூட்டம். என்னுடைய அழைப்பை ஏற்று, தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் இருந்து வந்த நிர்வாகிகள் அனைவரும், இந்தச் செய்தியை உங்க மாவட்டத்துக்கு, நகரத்துக்கு, கிராமத்துக்கு எடுத்துச் செல்லுங்கள்.

நான் சொன்னதை சொல்லுங்க. நான் கேட்டுக்கொண்டதை சொல்லுங்க. ஒவ்வொரு தொண்டரையும் நான் விசாரிச்சதா சொல்லுங்க. நான் உழைக்கச் சொன்னதை சொல்லுங்க. நான் அவர்களை நம்பி இருக்கேன் என்று சொல்லுங்க. 2026- ம் ஆண்டு தேர்தலிலும் நாம் தான் வெற்றி பெறப்போகிறோம். ஆணவத்தில் சொல்லவில்லை; உங்கள் உழைப்பு, ஆட்சியின் சாதனை, மக்கள் மேல் உள்ள நம்பிக்கையில் சொல்கிறேன்.

கடந்த 2021-ம் ஆண்டு தேர்தல் தமிழகத்தை அதிமுகவிடம் இருந்து மீட்ட தேர்தல். வருகிற 2026-ம் ஆண்டு தேர்தல் என்பது தமிழகத்தை பாஜக, அதிமுகவிடம் இருந்து பாதுகாப்பதற்கான தேர்தல். தமிழகத்தை நிரந்தரமாக ஆளும் தகுதி திமுகவுக்கு தான் இருக்கிறது என்பதை நிரூபிக்க வேண்டும். அதிமுக-பாஜக கூட்டணியை தமிழக மக்கள் விரும்பவில்லை. அவர்களின் கட்சிக்காரர்களும் விரும்பவில்லை. மற்ற கட்சியினரும் அந்தக் கூட்டணிக்கு போகவில்லை. நம்ம வெற்றிகள், எதிரிகளுக்கு கலக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது” என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *