பிஹார் மக்கள் மாற்றத்துக்கான மனநிலையில் இருக்கிறார்கள். நிச்சயம் பிஹாரில் ஆட்சி மாற்றம் நிகழும் என்று தேஜஸ்வி யாதவ் கூறினார்.
பிஹார் சட்டமன்றத் தேர்தல் நவம்பர் 6 மற்றும் 11 ஆகிய தேதிகளில் இரு கட்டங்களாக நடைபெற உள்ளது. இதையடுத்து தேர்தல் பிரசாரம் அனல் பறக்க நடந்து வருகிறது. இந்த தேர்தலில் ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கும், எதிர்க்கட்சிகளின் கூட்டணியான மகா கூட்டணிக்கும் இடையே போட்டி நிலவுகிறது. பிஹார் முதலமைச்சரும், ஐக்கிய ஜனதா தளத்தின் தலைவரான நிதிஷ்குமார் தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணி நடைபெறும் என பாஜக அறிவித்துள்ளது.
ஆனால், பிஹாரின் முதலமைச்சர் வேட்பாளர் என்று அறிவிக்கவில்லை. தேர்தலுக்குப் பிறகு சட்டமன்ற உறுப்பினர்கள் முதலமைச்சரை தேர்ந்தெடுப்பார்கள் என பாஜக தெரிவித்துள்ளது. இதனால் ஐக்கிய ஜனதா தளம் அதிருப்தியில் உள்ளது.
இந்த நிலையில், பிஹார் தலைநகர் பாட்னாவில் மகா கூட்டணியின் முதலமைச்சர் வேட்பாளரும், ராஷ்ட்ரிய ஜனதா தளத்தின் தலைவருமான தேஜஸ்வி யாதவ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “தேர்தல் அறிக்கையை இன்று தாங்கள் வெளியிட உள்ளோம். அதில், பிஹாரை முன்னேற்றுவதற்கு அடுத்த 5 ஆண்டுகளுக்கான தங்கள் திட்டம் குறித்து விரிவாக தெரிவிக்கப்படும். நாங்கள் முதலமைச்சர் வேட்பாளரை அறிவித்துள்ளோம்.
அடுத்த 5 ஆண்டுகளுக்கு எவ்வாறு செயல்படப் போகிறோம் என்பதற்கான தேஜஸ்வியின் பிரமாணப் பத்திரத்தை நாங்கள் வெளியிடப் போகிறோம். அதேபோல், தேசிய ஜனநாயகக் கூட்டணியும் முதலமைச்சர் வேட்பாளரை அறிவிக்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். மேலும், அவர்களின் திட்டங்கள் என்ன, அவர்களின் தொலைநோக்குப் பார்வை என்ன, பிஹாரை எவ்வாறு முன்னோக்கிக் கொண்டு செல்லப் போகிறார்கள் என்பது குறித்து அவர்கள் தெரிவிக்க வேண்டும்.
நாங்கள் எங்கள் தொலைநோக்குப் பார்வையை வழங்கியுள்ளோம். பிஹாரை முதல் மாநிலமாக மாற்றுவதில் நாங்கள் தெளிவாக உள்ளோம். ஆனால், அவர்கள் எதிர்மறையான விஷயங்களை மட்டுமே பேசுகிறார்கள். எங்கள் தலைவர்களைப் பற்றி குற்றச்சாட்டுக்களை முன்வைக்கிறார்கள். பிஹார் மக்கள் மாற்றத்துக்கான மனநிலையில் இருக்கிறார்கள். நிச்சயம் பிஹாரில் ஆட்சி மாற்றம் நிகழும்” என்றார்.
