ஒப்பனையை அழித்த உடனேயே அரியணை?- விஜய்யை கடுமையாக விமர்சித்த சீமான்

நடித்தால் நாட்டை ஆளலாம் என்ற போக்கு கொடுமையானது என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.

மதுரையில் அவர் இன்று செய்தியாளர்களிடம் கூறுகையில், ” கலையைப் போற்றலாம். கலைஞர்களைக் கொண்டாடலாம். நடித்தாலே போதும் நாட்டை ஆளக் கூடிய அனைத்து திறமையும் வந்து விடுகிறது, தகுதி வந்துவிடுகிறது என்று நாட்டு மக்கள் கருதுவார்களானால், அது மிகவும் கொடுமையான போக்காக மாறிவிடும். அதனை வருங்கால தலைமுறையினர், அறிவார்ந்த சமூகமாக உருவாகும் என நினைக்கும் போது தற்போதைய நிலை கண்டு ஒரு நடுக்கம் இருக்கிறது. ஒப்பனையை அழித்த உடனேயே அரியணை?

நீங்கள் நடிக்கும் போது நோட்டை கொடுப்போம் வாழ்வதற்கு, நடிப்பதை நிறுத்திவிட்டால் நாட்டைக் கொடுப்போம் ஆள்வதற்கு, என்கிற கோட்பாடு, நிலைப்பாடு உலகத்திற்கே அறிவை கடன் கொடுத்த தமிழ் சமூகம் இச்செயல்களை ஏற்கிறதா? இந்தியாவில் எல்லா மாநிலங்களிலும் சினிமா உள்ளது. கேரளாவிலும் சினிமா உள்ளது. ஆனால், எந்த மாநிலத்தில் நிகழாத விபத்து தமிழ்நாட்டில் நடக்கிறது.

திரை கவர்ச்சிகளில் மூழ்கி கிடக்கும் தமிழ் இனம் விழிப்புற்று ஏழ வேண்டும். அரசியல் என்பது வாழ்வியல், முன்னோர் எப்படி வாழ்ந்தார்கள் என்பது பற்றி படித்து தெரிந்து கொள்ளாவிட்டால் பெரும் சிக்கலாகி விடும். கரூரில் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் அழைத்து ஆறுதல் கூறுவது விஜய்யின் விருப்பம். அதில் நாம் கருத்து சொல்ல முடியாது” என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *