சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் இன்று (டிச.1) மிக கனமழை பெய்வதற்கான ஆரஞ்ச் அலர்ட் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
டிட்வா புயல் சென்னையை நெருங்கி வருவதால் நேற்று நள்ளிரவு முதல் மிதமான மழை பெய்துவந்த நிலையில் அதிகாலை முதல் பலத்த காற்றுடன் மழை பெய்து வருகிறது. இதனால் பள்ளி, கல்லூரி மாணவர்கள், வேலைக்கு செல்வோர் மற்றும் வாகன ஓட்டிகள் என அனைவரும் கடும் சிரமத்துக்குள்ளாகினர். மேலும், கடந்த 4 மணி நேரத்திற்கும் மேலாக மழை பெய்து வருவதால் பெரும்பாலான பகுதிகளில் சாலைகளில் தண்ணீர் தேங்கியது.
இந்த நிலையில், சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் இன்று மிக கனமழை பெய்வதற்கான ஆரஞ்ச் அலர்ட் எச்சரிக்கையை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது. மேலும் செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
