பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் வீட்டில் திருநெல்வேலி அல்வா உள்பட 109 வகையான சைவ உணவுகளுடன் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு இரவு விருந்து இன்று அளிக்கப்படுகிறது.
தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. இதற்காக திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி தேர்தல் பிரசார வேலைகள் தற்போதே தீவிரமாக இறங்கியுள்ளன. இதில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம் என்ற பெயரில் மாவட்டம் தோறும் பிரசாரம் செய்து வருகிறார். இந்த நிகழ்ச்சிகளில் கூட்டணி கட்சியான பாஜகவினரும் கலந்து கொள்கின்றனர்.
இந்த நிலையில் எடப்பாடி பழனிசாமிக்கு, நெல்லையில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் வீட்டில் இன்று இரவு விருந்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த விருந்தில் மத்திய அமைச்சர் எல்.முருகன், முன்னாள் மாநில தலைவர்கள் தமிழிசை, பொன்.ராதாகிருஷ்ணன், தேசிய செயற்குழு உறுப்பினர் ஹெச்.ராஜா மற்றும் சுதாகர் ரெட்டி, ஏ.பி.முருகானந்தம் உள்பட மாவட்ட தலைவர்கள் கலந்து கொள்கின்றனர். அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர்கள் கடம்பூர் ராஜூ, ஆர்.பி. உதயகுமார், எம்.ஆர். விஜயபாஸ்கர், சண்முகநாதன், இசக்கி சுப்பையா, ராஜலெட்சுமி, நெல்லை மாநகர் மாவட்ட செயலாளர் தச்சை கணேசராஜா உள்ளிட்ட பலர் கொள்கின்றனர்.
எடப்பாடி பழனிசாமிக்கு இரவு விருந்தில் 109 வகையான சைவ உணவுகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் நான்கு வகையான சூப், சால, குழிப்பணியாரம் உள்பட 9 வகை ஸ்டாட்டர்ஸ், மூன்று வகை பர்பிக்யூ, ஐந்து வகை சாட் உணவுகள், திருநெல்வேலி அல்வா, காசி அல்வா, பலாப்பழ மைசூர்பாக், பால் கொழுக்கட்டை உள்ளிட்ட 11 இனிப்பு வகைகள், மூன்று வகை போளி, வேக வைத்த 8 வகை உணவுகள், நான்கு ரொட்டி வகைகள், எட்டு வகை அரிசி மற்றும் சிறுதானிய உணவுகள், எட்டு வகையான சைடுடிஷ், ஆறு வகை பபே வகைகள், பதினைந்து வகையான தோசைகள், பதினேழு வகையான ஐஸ்கிரீம், ஏழு வகையான இயற்கை பழவகை ஜூஸ்கள் உள்பட 109 வகையான உணவுகள் பரிமாறப்படுகின்றன. இந்த விருந்துக்கான ஏற்பாட்டை நயினார் நாகேந்திரன் தடபுடலாக செய்து வருகிறார்.