பாலியல் வழக்கில் ஹாசன் தொகுதி முன்னாள் எம்.பி பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு சாகும் வரை சிறைத்தண்டனை விதிக்கப்பட்டதற்கு நடிகை ரம்யா வரவேற்றுள்ளார்.
இந்தியாவின் முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரனும் மஜத முன்னாள் எம்பியுமான பிரஜ்வல் ரேவண்ணா (33) பல்வேறு பெண்களுடன் நெருக்கமாக இருக்கும் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடியோக்கள் கடந்த 2024-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தின.
இதையடுத்து அவரது வீட்டு பணிப்பெண், மஜத கிராம பஞ்சாயத்து தலைவி உட்பட 4 பெண்கள் பிரஜ்வலுக்கு எதிராக புகார் அளித்தனர். அதன்பேரில் அவர் மீது 5 பாலியல் வன்கொடுமை வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட பிரஜ்வல் ரேவண்ணா பெங்களூரு மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சிறப்பு விசாரணை பிரிவு போலீஸார் இவ்வழக்கில் 1,632 பக்க குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தனர்.
பெங்களூருவில் மக்கள் பிரதிநிதிகள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்றது. அனைத்துகட்ட விசாரணையும் நிறைவடைந்த நிலையில் பெங்களூரு சிறப்பு நீதிமன்ற நீதிபதி சந்தோஷ் கஜனன் பட், ஆகஸ்ட் 1-ம் தேதி பிரஜ்வல் ரேவண்ணா குற்றவாளி என தீர்ப்பளித்தார்.
‘‘இவ்வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள பிரஜ்வல் ரேவண்ணா மீதான பாலியல் வன்கொடுமை குற்றங்கள் அரசு தரப்பால் சந்தேகத்துக்கிடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளன. அதற்கான சாட்சியங்களும், ஆவணங்களும் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. அதன் அடிப்படையில் பிரஜ்வல் ரேவண்ணா குற்றவாளி என்பது உறுதியாகியுள்ளது. அவருக்கான தண்டனை விவரங்கள் ஆகஸ்ட் 2-ம் தேதி வெளியிடப்படும்” என நீதிபதி சந்தோஷ் கஜனன் பட் தீர்ப்பளித்தார்.
அதன்படி தண்டனை விவரங்கள் நேற்று வெளியிடப்பட்டன. பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்படுவதாகவும் சாகும் வரை அவர் சிறையில் அடைக்கப்படுவார் என்றும் நீதிபதி சந்தோஷ் பட் அறிவித்தார்.
இந்த வழக்கில் அவர் மீது பதிவான சட்டப்பிரிவுகளின் அடிப்படையில் ஒட்டு மொத்தமாக ரூ.11 லட்சத்து 50 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
இந்த தீர்ப்பு குறித்து காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த நடிகை ரம்யா மகிழ்ச்சி தெரிவித்து தனது எக்ஸ் வலைதளப் பக்கத்தில் பதிவு வெளியிட்டுள்ளார்.
அதில், “சட்டம் அனைவருக்கும் ஒன்றே. பெண்களுக்கு எதிரான அனைத்து குற்றங்களுக்கும் கடுமையான தண்டனை கிடைக்கிறது” என்று பதிவிட்டுள்ளார்.