‘ராஜாவைத் தாலாட்டும் தென்றல்’- பாராட்டு விழா குறித்து மு.க.ஸ்டாலின்!

இது இசையின் அரசனுக்கு மட்டுமல்ல; அவரை வியக்கும் உலகில் உள்ள அத்தனை இசை ரசிகர்களுக்குமான பாராட்டு விழா என்று இளையராஜாவிற்கு செப்டம்பர் 13-ம் தேதி நடைபெற உள்ள பாராட்டு விழா குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.

லண்டனில் கடந்த மார்ச் 8-ம் தேதி சிம்பொனி இசைநிகழ்ச்சியை இசைஞானி இளையராஜா வெற்றிகரமாக நடத்தினார். அவருக்கு பிரதமர் நரேந்திர மோடி, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள், திரையுலகினர் வாழ்த்து தெரிவித்தனர்.

சிம்பொனி இசைநிகழ்ச்சி நடத்தி முடித்து விட்டு சென்னை திரும்பிய இளையராஜாவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டு தெரிவித்தார். அத்துடன் இளையராஜாவின் அரை நூற்றாண்டு இசைப்பயணத்தை கொண்டாடும் விதமாக தமிழக அரசு சார்பில் பாராட்டு விழா நடத்தப்படும் என அறிவித்திருந்தார்.

இந்த நிலையில், இளையராஜாவின் அரை நூற்றாண்டு இசைப்பயணத்தை சிறப்பிக்கும் விதமாக செப்டம்பர் 13-ந்தேதி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் மாலை 5.30 மணிக்கு பாராட்டு விழா நடைபெற உள்ளது. இவ்விழாவில் நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்ட திரைப்பிரபலங்கள் பங்கேற்கின்றனர். மேலும் வெளிநாட்டு இசைக்கலைஞர்களுடன் இசைக்கச்சேரி நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து இசைஞானி இளையராஜா கூறுகையில் “அரசு சார்பில் பாராட்டு விழா நடத்தப்படுவது இது முதல்முறை. உங்களுக்கு எவ்வளவு சந்தோஷமோ, அதே அளவுக்கு எனக்கு சந்தோஷம்” என்றார்.

இது தொடர்பாக தமிழ்நாடு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தளப்பக்கத்தில், “ராஜாவைத் தாலாட்டும் தென்றல்” – நம் பாராட்டு விழா. இது இசையின் அரசனுக்கு மட்டுமல்ல; அவரை வியக்கும் உலகில் உள்ள அத்தனை இசை இரசிகர்களுக்குமான பாராட்டு விழா என்று பதிவிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *