இளைஞானி இளையராஜாவுக்கு தமிழ்நாடு அரசு சார்பில், செப்டம்பர் 13-ம் தேதி சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் பாராட்டு விழா நடைபெறுகிறது.
இசைஞானி இளையராஜா தமிழ் உள்பட பல்வேறு மொழிகளில் சுமார் ஆயிரம் திரைப்படங்களுக்கு மேல் இசையமைத்து சாதனை படைத்துள்ளார். கடந்த 1976-ம் ஆண்டு வெளியான ‘அன்னக்கிளி’ திரைப்படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமான இளையராஜா, தமிழ் சினிமாவில் தனக்கென தனியிடத்தைப் பெற்றுள்ளார். அவர் லண்டன் அப்போலோ அரங்கத்தில் 2025 மார்ச் 8-ம் தேதி சிம்பொனி இசைநிகழ்ச்சியை அரங்கேற்றினார்.அவருக்கு இந்திய பிரதமர் நரேந்திரமோடி, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்பட பலர் வாழ்த்து தெரிவித்தனர்.
இந்த சாதனை முடிந்து சென்னை திரும்பிய இளையராஜாவிற்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தார். அப்போது இளையராஜாவின் அரை நூற்றாண்டு இசைப் பயணத்தை கொண்டாடும் விதமாக தமிழ்நாடு அரசு தரப்பில் பாராட்டு விழா நடத்தப்படும் என்று அறிவித்திருந்தார். அதன்படி அரசு சார்பில் பாராட்டு விழா கடந்த ஜூன் 2-ம் தேதியன்று அவரது பிறந்தநாளை முன்னிட்டு சென்னையில் நடத்தப்பட உள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் அறிவித்திருந்தார். ஆனால் ஒரு சில காரணங்களால் இசைநிகழ்ச்சி நடைபெறவில்லை.
இந்த நிலையில், இளையராஜாவின் அரை நூற்றாண்டு இசைப் பயணத்தை சிறப்பிக்கும் விதமாக, வரும் 13-ம் தேதி மாலை 5.30 மணிக்கு சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் விழா நடைபெறவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விழாவில் நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்ட திரைப்பிரபலங்கள் பங்கேற்கின்றனர். மேலும் வெளிநாட்டு இசைக்கலைஞர்களின் இசைக் கச்சேரி நடத்தவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.