சென்னை: ” மின்தடையால் மாணவர்களுக்கு எந்த பாதிப்பும் கிடையாது. மறு தேர்வு நடத்த முடியாது,” என சென்னை ஐகோர்ட்டில் மத்திய அரசு கூறியுள்ளது. இந்த வழக்கில் வரும் 6 ம் தேதி தீர்ப்பு வழங்கப்பட உள்ளது.
நாடு முழுதும் இளநிலை மருத்துவ படிப்புகளாக எம்.பி.பி.எஸ்.,- – பி.டி.எஸ்., உள்ளிட்டவற்றில் சேருவதற்கு, ‘நீட்’ நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது. இந்த தேர்வை, தேசிய தேர்வு முகமை நடத்துகிறது. இந்த ஆண்டுக்கான நீட் தேர்வு மே4ம் தேதி நடந்தது. தமிழகத்தில் நுாற்றுக்கணக்கான தேர்வு மையங்களில் மாணவ-மாணவியர் தேர்வு எழுதினர். சென்னை ஆவடியில் உள்ள பி.எம்.கேந்திரிய வித்யாலயா பள்ளி மையத்தில் 464 மாணவர்கள் தேர்வு எழுதினர். தேர்வு நடந்த அன்று ஏற்பட்ட மின் தடையால், தங்களால் தேர்வை முழுமையாக எழுத முடியவில்லை என்று மறுதேர்வு நடத்த கோரி, சென்னைஐகோர்ட்டில், திருவள்ளூர் மாவட்டம், பருத்திப்பட்டு பகுதியை சேர்ந்த சாய்ப்ரியா, காஞ்சிபுரம் பகுதியை சேர்ந்த ஹரிஹரன் உட்பட 13 மாணவர்கள் வழக்கு தொடர்ந்தனர். இதனை விசாரித்த ஐகோர்ட், ஜூன் 2 வரை முடிவுகளை வெளியிட இடைக்கால தடை விதித்தது.