மதுரையில் காவல்துறை விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட இளைஞர் உயிரிழந்த வழக்கில் சிபிசிஐடி விசாரணை இன்று தொடங்கியுள்ளது.
மதுரை அண்ணாநகர் அருகே உள்ள யாகப்பா நகரைச் சேர்ந்தவர் தினேஷ் குமார் (30). கடந்த 9-ம் தேதி வீட்டிலிருந்த போது அண்ணாநகர் போலீஸார் மற்றும் தனிப்படை போலீஸார் விசாரணைக்கு இவரை அழைத்துச் சென்றனர். இந்த நிலையில், அன்று மதியம் வண்டியூர் வைகையாற்று கால்வாயில் தினேஷ்குமார் சடலமாக மீட்கப்பட்டார். தினேஷ்குமார் விசாரணையின்போது தப்பியோடிய போது அவர் கால்வாயில் விழுந்து விட்டதாக அவரது பெற்றோரிடம் போலீஸார் கூறினர்.
ஆனால், தினேஷ்குமாரை விசாரணைக்கு அழைத்துச் சென்ற அண்ணாநகர் போலீஸார் மற்றும் தனிப்படை போலீஸார் அடித்துக் கொன்று விட்டதாக அவரது பெற்றோர் குற்றம் சாட்டினர். இதையடுத்து அவர்கள் காவல் நிலையத்தினை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். அத்துடன் இறந்த தினேஷ்குமாரின் உடலை 2 நாட்களாக வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில், தினேஷ்குமார் உயிரிழப்பு விவகாரத்தில் அண்ணாநகர் ஆய்வாளராக பணிபுரிந்த பிளவர்சீலா ஆயுதப்படைக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.
திருப்புவனத்தில் அஜித்குமார் என்ற இளைஞர் காவல் துறை விசாரணையின் போது அடித்துக் கொல்லப்பட்டதாக எழுந்த புகார் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அதே போல சம்பவம் மதுரையிலும் நடந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு நீதிபதிகள், இவ்வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட்டனர் அதன்படி தினேஷ்குமார் உயிரிழந்த வழக்கு தொடர்பான விசாரணையை சிபிசிஐடி அதிகாரிகள், இன்று தொடங்கியுள்ளனர்.
