இளைஞன் உடலை அடக்கம் செய்ய விடாத மூடநம்பிக்கை- 26 மணி நேரத்திற்குப் பிறகு நடந்தது என்ன?

ஊரார் ஒதுக்கி வைத்த காரணத்தால் ஒடிசாவில் இறந்த இளைஞனின் உடலை 26 மணி நேரமாக இறுதிச்சடங்கு செய்ய முடியாத அவலநிலை ஏற்பட்டது.

ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டத்தின் ஜலேஸ்வர் தொகுதிக்குட்பட்ட தியூலாபர் கிராமத்தில் இந்த கொடுமையான சம்பவம் நடைபெற்றுள்ளது. இந்த கிராமத்தைச் சேர்ந்த மதன் பெஸ்ரா என்ற இளைஞர் பல நாட்களாக உடல்நலன் குன்றியிருந்தார். இந்த நிலையில் வியாழனன்று அவர் இரவு உயிரிழந்தார். அவரது குடும்பத்தினர் இறுதிச்சடங்கு செய்ய கிராமவாசிகளிடம் உதவி கேட்டனர். ஆனால், மூடநம்பிக்கை காரணமாக மதன் பெஸ்ரா குடும்பத்தினர் சூனியம் செய்பவர்கள் என்று கிராமத்தினர் யாரும் உதவ முன்வரவில்லை. இதன் காரணமாக இறந்து போன மதனின் உடல் 26 மணி நேரத்திற்கும் மேலாக அடக்கம் செய்யப்படாமல் இருந்தது.

அவரது குடும்பத்தினர் பலரிடமும் உதவி கேட்டும் கிராமத்தினர் யாரும் உதவ முன் வரவில்லை. இந்த நிலையில், அரசு சாரா தன்னார்வலர்களான பரிதா மற்றும் அமித் குமார் தாஸ் உட்பட பத்துக்கும் மேற்பட்டோர் மதனின் உடலைத் தோளில் சுமந்து சென்று  ஜலேஸ்வரில் நேற்று இரவு இறுதிச்சடங்கை நடத்தியுள்ளனர்.

மதன் குடும்பத்தினரை  கிராமத்தினர் பல ஆண்டுகளாக ஒதுக்கி வைத்துள்ளதாகவும், பல ஆண்டுகளாக  அந்த குடும்பத்தினர் சமூகப் புறக்கணிப்பை எதிர்கொண்டதாகவும் தன்னார்வலர்கள் கூறினர். அவர்களுக்கு யாரும் உதவிக்கூடாது என்று உத்தரவிடப்பட்டதாகவும், நீண்ட காலமாக தண்ணீர் உள்ளிட்ட எந்த உதவியும் அவர்களுக்கு வழங்க கிராமத்தினர் மறுத்ததாகவும் கூறினர்.

இதுகுறித்து  தன்னார்வலர்கள் கூறுகையில், “இந்த கிராமத்தில் சாதி மற்றும் மூடநம்பிக்கை இன்னும் பரவலாக உள்ளது. இத்தகைய நடைமுறைகள் மாநிலத்தை தொடர்ந்து பின்னுக்கு தள்ளி வருகிறது. ஒடிசா முதல்வர், இந்திய ஜனாதிபதி இருவரும் பழங்குடிப் பகுதிகளைச் சேர்ந்தவர்கள், ஆனால், இந்த கிராம மக்கள் இன்னும் பழமையான மனநிலையிலிருந்து வெளியே வரவில்லை ” என்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *