பெங்களூருவில் இருந்து ரயிலில் போதை மருந்து கடத்தி வந்த இரண்டு ஆட்டோ ஓட்டுநர்களை கொல்லத்தில் கலால் துறை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
ஓணம் பண்டிகையை முன்னிட்டு கேரளா மாநிலம் முழுவதும் கலால் பிரிவு அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக கொல்லம் ரயில் நிலையத்தின் இரண்டாவது வாயில் அருகே சந்தேகத்திற்கு இடமான இருவரை பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் பெங்களூருவில் இருந்து போதைப்பொருள்களை ரயிலில் மறைத்து கடத்தி வந்தது தெரியவந்தது.
அவர்களிடமிருந்து 14 கிராம் எம்.டி.எம்.ஏ எனும் போதைப்பொருள் மற்றும் கஞ்சா ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக ஆட்டோ ஓட்டுநர்கள் அனு மற்றும் அன்சாரி ஆகியோர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் மாணவர்களுக்கு போதைப்பொருள்களை விற்பனை செய்வது கண்டறியப்பட்டது. அவர்களிடம் தொடர்பில் உள்ள வியாபாரிகள் குறித்த விவரங்களை கலால்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.