எந்த ஊருக்குச் சென்றாலும் வாரத்தில் ஐந்து நாட்கள் மட்டுமே தங்குகின்றனர். சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் குற்றச் செயல்களில் ஈடுபடுகின்றனர். விடுமுறை தினம் என்பதால் ஏடிஎம் சேவையில் குறைபாடு ஏற்பட்டு அதை வங்கிகள் கவனிப்பதற்குள் தப்பிவிடுகின்றனர்” என்கிறார் சென்னை, திருவான்மியூர் காவல் நிலைய ஆய்வாளர் முகமது புகாரி.
மே 26 அன்று ஏடிஎம் இயந்திரத்தின் பெட்டியை உடைக்காமல் கொள்ளையடித்ததாக உ.பி-யை சேர்ந்த மூன்று பேர் கைதான விவகாரத்தில் அவர்களின் பின்னணி குறித்து பிபிசி தமிழிடம் இவ்வாறு அவர் தெரிவித்தார்.
ஏடிஎம் மைய கொள்ளைச் சம்பவத்தில் என்ன நடந்தது? பணம் திருடு போனால் பொதுமக்கள் செய்ய வேண்டியது என்ன?
சென்னை திருவல்லிக்கேணியில் வசித்து வரும் நரேன்குமார், ஹிட்டாச்சி ஏடிஎம் சர்வீஸ் (Hitachi ATM Service) நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். கடந்த ஞாயிறு அன்று தங்களின் மும்பை அலுவலகத்தில் இருந்து தொலைபேசி அழைப்பு ஒன்று வந்ததாக, திருவான்மியூர் காவல்நிலையத்தில் அளித்துள்ள புகார் மனுவில் கூறியுள்ளார்.
திருவான்மியூர், திருவள்ளூவர் நகரில் உள்ள பாரத் ஸ்டேட் வங்கிக் கிளையின் ஏடிஎம் மையத்தில் ஏதோ தவறு நடந்துள்ளதாகவும் அதை உடனே சென்று சோதனை செய்யுமாறு தங்கள் நிறுவனத்தின் அதிகாரிகள் கூறியதாக புகார் மனுவில் நரேன்குமார் குறிப்பிட்டுள்ளார்.