இன்றைய (17/05/2025) நாளிதழ்களில் வெளிவந்துள்ள முக்கியச் செய்திகள் சில இங்கே தொகுத்து வழங்கப்பட்டுள்ளன.
நட்சத்திர ஓட்டலில் கொள்ளையடிக்கப்பட்டு மீட்கப்பட்ட ரூ.23 கோடி வைரக் கல்லுக்கு பதிலாக, போலீஸார் போலி வைரத்தை கொடுத்துவிட்டதாக காவல் ஆணையர் அலுவலகத்தில் வியாபாரி புகார் அளித்துள்ளதாக தி இந்து தமிழ் திசை நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
அந்த செய்தியில், ” சென்னை அண்ணாநகர் 17-வது தெருவில் வசித்து வருபவர் சந்திரசேகர் (70). பிரபல வைர வியாபாரியான இவர் பழமையான வைரக்கல் ஒன்றை நண்பரான மற்றொரு வியாபாரியிடம் பெற்று வைத்திருந்தார். அந்த வைரக்கல்லை ரூ.23 கோடிக்கு விற்பதற்கு 4 முகவர்களிடம் பேரம் பேசினார்.
வடபழனியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் வைத்து வைரக்கல்லை வாங்குவதற்கு வந்திருந்த 4 முகவர்களும் திடீரென கொள்ளையர்களாக மாறி வைர வியாபாரி சந்திரசேகரை தாக்கி, ஓர் அறையில் கட்டிப்போட்டுவிட்டு வைரக்கல்லை கொள்ளையடித்து தப்பினர். இந்த விவகாரம் தொடர்பாக வடபழனி போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்தனர்.
வைரக்கல்லை கொள்ளையடித்த பரமக்குடியை சேர்ந்த அருண் பாண்டியராஜன், சென்னை அய்யப்பன்தாங்கலை சேர்ந்த ஜான் லாயிட், வளசரவாக்கத்தை சேர்ந்த விஜய், திருவேற்காட்டையை சேர்ந்த ரத்தீஷ் ஆகிய 4 பேரும் தூத்துக்குடியில் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டனர். முன்னதாக அவர்களிடமிருந்து வைரக்கல் மீட்கப்பட்டது.