சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்படுள்ள தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடல்நலம் குறித்து ரஜினிகாந்த், கமலஹாசன் ஆகியோர் நலம் விசாரித்தனர்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை நடைபயிற்சியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அவருக்கு லேசான தலைச்சுற்றல் ஏற்பட்டுள்ளது.ஆயினும், அவர் திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற அதிமுக முன்னாள் அமைச்சர் அன்வர் ராஜா, திமுகவில் இணையும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார். இதனைத் தொடர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு அவருக்கு மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. முதலமைச்சர் ஸ்டாலின்2 நாள்கள் ஓய்வெடுக்க வேண்டும் என்று மருத்துவர்கள் தரப்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து முதலமைச்சர் ஸ்டாலின் கலந்துகொள்ளவிருந்த அரசு நிகழ்ச்சிகள் அனைத்தும் அடுத்த 2 நாள்களுக்கு ரத்து செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் நடிகர் ரஜினிகாந்த், நலம் விசாரித்தார். தொலைபேசி மூலம் பேசிய அவர் முதலமைச்சர் விரைவில் நலமுடன் வீடு திரும்ப விரும்புவதாக தெரிவித்தார். இதேபோல், நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான, கமல்ஹாசன் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு முதலமைச்சரை நலம் விசாரித்தார் என்று மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.