ஒன்றரை கோடி ரூபாய் நஷ்டஈடு கோரி சோனி நிறுவனத்தின் காப்புரிமை தொடர்பான வழக்கை மும்பை உயர்நீதிமன்றத்தில் இருந்து சென்னை உயர்நீதிமன்றத்திற்கு மாற்றக்கோரி இசையமைப்பாளர் இளையராஜா தொடர்ந்த வழக்கை உச்சநீதிமன்றம் அதிரடியாக தள்ளுபடி செய்துள்ளது.
இசையமைப்பாளர் இளையராஜாவின் இளையராஜா மியூசிக் & மேனேஜ்மென்ட் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்திற்கு எதிராக சோனி மியூசிக் என்டர்டெயின்மென்ட் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனம், மும்பை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது.அதில், ஒலிப்பதிவுகளில் சோனி நிறுவனத்தின் பதிப்புரிமையை இளையராஜாவின் நிறுவனம் மீறியதாக குற்றம் சாட்டப்பட்டது. சோனி மியூசிக் நிறுவனத்திற்குச் சொந்தமான 536 ஆல்பங்களில், 22 ஆல்பங்கள் பொதுமக்களுக்குக் கிடைத்ததாகவும். இதன் மூலம் சோனியின் பதிப்புரிமை மீறப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
ஆனால், ஒளிபரப்பப்பட்ட படைப்புகளின் உரிமை தங்களுக்குத்தான் இருப்பதாக இளையராஜாவின் நிறுவனம் தெரிவித்ததுடன், பொதுமக்களுக்கான ஒளிபரப்பையும் தொடர்ந்து மேற்கொண்டது. இதையடுத்து, பதிப்புரிமையை மீறியதற்காக இழப்பீடு கோரி, இளையராஜாவின் நிறுவனத்திற்கு எதிராக சோனி மியூசிக் நிறுவனம் மும்பை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது. சுமார் ஒன்றரை கோடி ரூபாய் நஷ்டஈடு கோரி கடந்த 2022-ம் ஆண்டு சோனி மியூசிக் இந்த வழக்கை தாக்கல் செய்திருந்தது.
இந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றத்திற்கு மாற்றக் கோரி இசையமைப்பாளர் இளையராஜா தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில், இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர் சுவாய் தலைமையிலான அமர்வு தள்ளுபடி செய்துள்ளது.