அமமுக விலக நான் காரணமல்ல- நயினார் நாகேந்திரன் பேட்டி

தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து அமமுக விலக நான் காரணம் அல்ல என தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கூறினார்.

இது தொடர்பாக திருநெல்வேலியில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களை இன்று சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், * தமிழ்நாட்டின் தேசிய ஜனநாயக கூட்டணியின் தலைவராக எடப்பாடி பழனிசாமியை நான் அறிவிக்கவில்லை. திருநெல்வேலியில் நடைபெற்ற பாஜக பூத் கமிட்டி மாநாட்டில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக வேண்டும் என அண்ணாமலைதான் கூறினார். என்னைப் போன்றவர்கள் உயர்ந்த நிலைக்கு வர டி.டி.வி.தினகரனும் ஒரு காரணம். அவருக்கும், எனக்கும் எந்த கருத்து வேறுபாடும் இல்லை.

கடந்த 2001-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தல் உட்படப் பல தருணங்களில் டி.டி.வி. தினகரன் முக்கியப் பங்காற்றியவர். அமித்ஷாவின் வழிகாட்டுதலின்படிதான், தமிழ்நாடு பாஜக மாநிலத் தலைவராகச் செயல்படுகிறேன். தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து அமமுக விலக நான் தான் காரணம் என்று எந்த அடிப்படையில் டி.டி.வி.தினகரன் கூறுகிறார் என்று தெரியவில்லை. கூட்டணியிலிருந்து கட்சிகள் விலகுவதும், தற்போது நடைபெறும் நிகழ்வுகளும் எனக்கும் மனவருத்தம் தான். அதிமுக இணைய வேண்டும் என ஆரம்ப காலத்தில் இருந்தே நான் கூறி வருகிறேன் ” என்று தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *