தொழில் முதலீடுகளை ஈர்ப்பதில் திராவிட மாடல் அரசு படுதோல்வி அடைந்து விட்டது என்று பாமக தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஜெர்மனி மற்றும் இங்கிலாந்து நாடுகளில் மேற்கொண்ட பயணங்களின் போது, ரூ.15,516 கோடி முதலீடுகள் ஈர்க்கப்பட்டிருப்பதாகவும், அதன் மூலம் 17,613 பேருக்கு வேலைவாய்ப்புகள் கிடைக்கும் என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறி இருக்கிறார். முதலீடுகளின் அளவு மிகக்குறைவு என்பது மட்டுமின்றி, அவற்றில் பெரும்பாலானவை ஜோடிக்கப்பட்டவை ஆகும். இயல்பாக வரக்கூடிய சிறிதளவு முதலீடுகளையும், வருவதற்கு வழியில்லாத பெருமளவு முதலீடுகளையும் தாம் ஈர்த்து வந்ததாக முதலமைச்சர் நாடகமாடுவது கண்டிக்கத்தக்கது.
ஜெர்மனியில் திரட்டப்பட்ட ரூ.7020 கோடி முதலீடுகளில் குறைந்தது ரூ.5319 கோடி முதலீடு விரிவாக்கத் திட்டங்களுக்கானவை தான். இங்கிலாந்தில் கையெழுத்திடப்பட்ட ரூ.8496 கோடி முதலீட்டுக்கான ஒப்பந்தங்கள் அனைத்துமே விரிவாக்கத் திட்டங்களுக்கானவை தான். மொத்தத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் வெளிநாட்டு பயணத்தில் கையெழுத்திடப்பட்ட ரூ.15,516 கோடி முதலீட்டுக்கான ஒப்பந்தங்களில் 89 சதவீதம், அதாவது ரூ.13,815 கோடிக்கான முதலீடுகள் விரிவாக்கத் திட்டங்களுக்கானவை.
இவற்றை தமிழ்நாட்டில் இருந்தே ஈர்த்திருக்க முடியும். இதற்காக கோடிக்கணக்கில் செலவு செய்து கொண்டு இங்கிலாந்துக்கும், ஜெர்மனிக்கு முதலமைச்சர் சென்றிருக்கத் தேவையில்லை. தொழில் முதலீடுகளை ஈர்ப்பதில் திராவிட மாடல் அரசு படுதோல்வி அடைந்து விட்டது என்பது தான் உண்மை. அதை மறைப்பதற்காகத்தான் இத்தகைய நாடகங்களை திமுக அரசு நடத்தி வருகிறது என்று கூறியுள்ளார்.