நடிகை ரினி ஜார்ஜ் பாலியல் குற்றச்சாட்டுகளை அடுத்து கேரள இளைஞர் காங்கிரஸ் தலைவர் ராகுல் மம்கூத்ததில் ராஜினாமா செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கேரள இளைஞர் காங்கிரஸ் தலைவராக இருந்தவர் ராகுல் மம்கூத்தத்தில். இவர் பாலக்காடு சட்டமன்ற உறுப்பினராகவும் உள்ளார். இவர் மீது நடிகை ரினி ஜார்ஜ், பாலியல் துன்புறுத்தல் புகார் அளித்திருந்தார். தன்னை ஓட்டலுக்கு அழைத்ததாகவும், பல கட்டங்களில் மோசமான தகவல்கள் அனுப்பியதாகவும் பரபரப்பு புகார் கூறியிருந்தார் இதையடுத்து கேரள இளைஞர் காங்கிரஸ் தலைவர் பதவியை ராகுல் மம்கூத்ததில் இன்று ராஜினாமா செய்துள்ளார்.
இந்த சம்பவம் குறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் வி.டி.சதீஷன் கூறுகையில், புகார்தாரர் என் மகள் போன்றவர். ஒரு செய்தியை மட்டும் வைத்து ஒருவரை தண்டிக்க முடியாது. தற்போது தீவிரமான ஒரு புகார் வந்துள்ளது. கட்சி அதை ஆராய்ந்து நடவடிக்கை எடுக்கும் என்று கூறினார்.
பாலக்காடு தொகுதி காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினரான ராகுல் மம்கூத்தத்தில் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று பாஜக, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் ஆகியவை வலியுறுத்தியிருந்தன. இந்த நிலையில், தனது கட்சி பதவியை மட்டும் ராகுல் மம்கூத்தத்தில் ராஜினாமா செய்துள்ளது கேரள அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.