வரும் சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணி 200 இடங்களிலும் தோற்கும் என்று பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கூறினார்.
சென்னை தி. நகர் தாமஸ் ரோட்டில் பாஜக சார்பில் சேவை வாரம் இன்று கொண்டாடப்பட்டது. இந்நிகழ்வில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கலந்து கொண்டு தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். மாநில செயலாளர் வினோஜ் பி.செல்வம், மாவட்ட தலைவர் கிரி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இதன் பின் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களிடம் கூறுகையில், பாஜக சார்பில் சுதந்திர தினத்தை வீடு தோறும் கொண்டாட வேண்டும் என்று அகில இந்திய தலைமை முடிவெடுத்துள்ளது. இதையொட்டி வீடு, வீடாக அதனைக் கொண்டு செல்ல இருக்கிறோம். அடுத்த மாதம் 2-ந்தேதி வரை வீடு தோறும் கொடி ஏற்ற வேண்டும் என்று எல்லா மக்களிடமும் எடுத்துக்கூற இருக்கிறோம். அனைவரும் தேசபக்தியோடு இருக்க வேண்டும் என்று அறிவுறுத்த உள்ளோம். தூய்மை பணியாளர்களுக்கு பாத பூஜை பண்ணியவர் எங்கள் பிரதமர். பாஜகவின் ஆதரவு அவர்களுக்கு எப்போதும் உண்டு. எங்களது கட்சியின் துணைத் தலைவர்கள் நேரில் சென்று ஆதரவு அளித்திருக்கிறார்கள்.
திமுக அரசு தேர்தல் வாக்குறுதிகள் எதையாவது நிறைவேற்றியுள்ளதா? திட்டங்களில் ஸ்டாலின் பெயர் இருக்கக்கூடாது என்று நீதிமன்றமே கண்டனம் தெரிவிக்கும் வகையில் தான் இந்த ஆட்சி உள்ளது.தொடக்கப் பள்ளிகளில் ஆசிரியர்களே இல்லை. அதனால்தான் பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை குறைந்துள்ளது. ஆதிதிராவிடர் பள்ளிகளில் 30 ஆயிரம் குழந்தைகள் குறைந்திருக்கிறார்கள். தமிழகத்தில் பள்ளி மாணவர்களின் கல்வி திறன் வெகுவாக குறைந்து உள்ளது.
பாஜக வாக்குத் திருட்டு செய்திருப்பதாக கூறுகிறார்கள். ஆனால் தேர்தல் ஆணையம் என்பது ஒரு தனிப்பட்ட செயல்பாடு கொண்டதாகும். தமிழகத்தில் ஒரு நாளைக்கு 4 முதல் 5 படுகொலைகள் நடக்கிறது. சட்டம் ஒழுங்கு சரி இல்லாததே இதற்கு முக்கிய காரணமாகும். திமுக தோல்வி பயத்தில் இருக்கிறது. அதனால் தான் புதுப்புது திட்டங்களை அறிவித்து வருகிறது. 2026-ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணி 200 இடங்களிலும் தோற்கும் என்று தெரிவித்தார். பாஜக கூட்டணிக்கு மீண்டும் வருமாறு ஓ.பன்னீர்செல்வத்திற்கு அழைப்பு விடுக்கப்படுமா என்ற கேள்விக்கு, பின்னர் பேசலாம் என்றார் நயினார் நாகேந்திரன்.