தங்களுக்கு வழங்கப்பட வேண்டிய மூன்று மாத சம்பளத்தைக் கேட்ட ஊழியர்களை கோழி வியாபாரி அறையில் அடைத்து வைத்து பெல்ட்டால் அடித்து கொடுமைப்படுத்திய சம்பவம் உத்தரப்பிரதேசத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலம், மீரட்டைச் சேர்ந்தவர் தொழிலதிபர் ஷான் குரேஷி. லிசாடி கேட் காவல் நிலையப்பகுதியில் வசிக்கும் இவரின் கோழிப்பண்ணையில் சஜித், சமீர் என்ற ஊழியர்கள் பணிபுரிந்து வந்தனர். இவர்கள் இருவருக்கும் மூன்று மாத சம்பள பாக்கி இருந்ததாக கூறப்படுகிறது. தங்களுக்கு வழங்கப்பட வேண்டிய சம்பள பாக்கியை வழங்க வேண்டும் என்று ஷான் குரேஷியிடம் அவர்கள் கேட்டு வந்துள்ளனர்.
சம்பள பாக்கியைக் கேட்ட இரண்டு ஊழியர்களையும் தனது வீட்டிற்கு வரச்சொன்ன குரேஷி, அவர்களை ஒரு அறையில் அடைத்து வைத்துள்ளார். இதன் பின் அவர்கள் கோழிகளைத் திருடியதாகக் கூறி பெல்டால் தாக்கத் தொடங்கினார். கோழிகளைத் திருடவில்லை என்று அவர்கள் கூறியும் குரேஷி, அவர்களை பெல்ட்டால் மாறி மாறி அடித்துள்ளார். இதனால் கோழிப்பண்ணை ஊழியர்கள் சஜித், சமீர் கதறியழுதனர். இந்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலானது. இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள், சம்பந்தப்பட்ட ஷான் குரேஷி மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர். மீரட் காவல் துறையினர் வெளியான வீடியோ அடிப்படையில் விசாரணை நடத்தி வருகின்றனர்.