சமூக சுகாதார மையத்தில் ஊழியர் ஒருவர், பிரசவத்திற்கு வந்த பெண்ணிடம் 1,800 ரூபாய் லஞ்சம் வாங்கிய விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக லஞ்சம் வாங்கிய பெண் ஊழியர் பேசும் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
ஒடிசா மாநிலம், போலங்கிர் மாவட்டத்தில் காந்தபாஞ்சி சமூக சுகாதார மையத்தில் (சிஎஃச்சி) பிரசவத்திற்காக மன்ஜகத் என்ற பெண்மணி அனுமதிக்கப்பட்டிருந்தார். இவர் குடும்பத்தினரிடம் முரிபஹால் கிராமத்தைச் சேர்ந்த ஆஷா சுகாதார ஊழியரான கௌரி பாக் என்பவர் மிரட்டி லஞ்சம் கேட்டுள்ளார். இதனால் மன்ஜகத் குடும்பத்தினர், 1,800 ரூபாயை பெண் ஊழியர் கௌரி பாக்கிடம் வழங்கினர்.
இந்த நிலையில், லஞ்சப்பணம் மருத்துவர்கள் முதல் துப்புரவு பணியாளர்கள் வரை எப்படி விநியோகிக்கப்படுகிறது என்பதை மருத்துவமனை ஊழியர் கௌரி பாக் பேசும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை பார்த்த பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
சுகாதார மையத்தில் நிலவும் லஞ்ச லாவண்யத்தை தடுத்து நிறுத்துவதுடன் லஞ்சம் வாங்கிய ஊழியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தியுள்ளனர். சுகாதார சேவைகள் இலவசமாக வழங்கப்படும் என்று அரசாங்கம் உறுதியளித்தாலும் நோயாளிகளிடம் ஊழியர்கள் லஞ்சம் வாங்குவது தொடர்கதையாக உள்ளதாக உள்ளூர்வாசிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.