அழகர் கோவிலில் வணிக ரீதியான கட்டுமானங்களுக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை இடைக்கால தடைவிதித்துள்ளது.
திருமாலிருஞ்சோலை என்று ஆழ்வார்களால் மங்களாசாசனம் பாடப்பெற்ற அழகர் கோவில் மதுரையில் இருந்து 21 கி.மீ தொலைவில் உள்ளது. இங்கு சித்திரை மாதத்தையொட்டி நடைபெறும் திருவிழா உலகப்புகழ் பெற்றது. அழகர் கோவிலில் அறுபடை வீடுகளில் ஒன்றான பழமுதிர்சோலை, பதினெட்டாம்படி கருப்பசாமி என வழிபாட்டு தலங்கள் உள்ளன. இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து இந்த கோயிலுக்கு அன்றாடம் ஆயிரக்கணக்கானோர் வருகின்றனர். அவர்கள் தங்குவதற்காக அழகர் கோவிலில் தங்கும் விடுதி, திருமண மண்டபங்கள் கட்டப்பட்டுள்ளன. இன்னும் சில கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் அழகர் கோவில் வளாகத்திற்குள், உபரி நிதியில் கட்டப்படும் வணிக கட்டுமானங்களுக்கு தடை விதிக்கக் கோரி நாகையைச் சேர்ந்த வெங்கடேஷ் என்பவர் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு தொடர்பான விசாரணை இன்று நடைபெற்றது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், மதுரை அழகர் கோவிலில் வணிக ரீதியான கட்டுமானங்களுக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டனர். ஆனால், கோவில் நிதியில் கட்டப்படும் அடிப்படை வசதிகளுக்கான கட்டுமானங்களுக்கு தடை விதிக்க முடியாது என்று குறிப்பிட்ட நீதிபதிகள், மற்ற கட்டுமானங்கள் மத ரீதியான பயன்பாட்டுக்கு மட்டும் பயன்படுத்தப்படும் என உறுதி தர வேண்டும் என உத்தரவிட்டுள்ளனர்.