வரும் சட்டமன்றத் தேர்தலில் தவெக தலைவர் விஜய்யின் வருகை தாக்கத்தை ஏற்படுத்தும் என்று தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார்.
தூத்துக்குடி விமான நிலையத்தில் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், கடந்த 2006-ம் ஆண்டு தேர்தலில் விஜயகாந்த் யாருடனும் கூட்டணி இல்லாமல் தனித்து களத்தில் நின்றார். அனைத்து தொகுதிகளிலும் போட்டியிட்டோம். அந்தத் தேர்தலில் மிகப்பெரிய தாக்கம் ஏற்பட்டது. அது போல கண்டிப்பாக 2026- சட்டமன்றத் தேர்தலில் தவெக தலைவர் விஜய்யின் வருகை தாக்கத்தை ஏற்படுத்தும்.
தேர்தல் ஆணையம் எப்போதும் பொம்மையாக தான் செயல்படுகிறது. வாக்கு திருட்டு தொடர்பாக இந்தியா முழுக்க சீர்திருத்தம் நடைபெற வேண்டும். வாக்கிற்குப் பணம் கொடுப்பது, வாக்குத் திருட்டு, கள்ள ஓட்டு எல்லாமே சரி செய்ய வேண்டும்.
அமெரிக்க விதித்த கூடுதல் 50 சதவீத வரி விதிப்பானது ஏற்றுமதி, இறக்குமதியில் ஈடுபடும் இந்தியர்களுக்கு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். ஏற்கெனவே நமது நாட்டில் ஜிஎஸ்டி போன்ற வரிகளால் பாதிக்கப்ட்டு இருக்கக்கூடிய நிலையில், அமரிக்காவில் இந்த வரி உயர்வால் இந்தியாவில் மிகப்பெரிய பாதிப்பு ஏற்படும். மத்திய அரசு உடனடியாக அமெரிக்காவிடம் பேசி, சரி செய்து நமது பொருளாதாரத்தை மேம்படுத்த வேண்டும்.
தேர்தல் வாக்குறுதிகளை திமுக இன்னும் நிறைவேற்றவில்லை. தேர்தல் வருகிறது என்றவுடன் புதிது புதிதாக சொல்லி வருகின்றனர். தேமுதிகவிற்கு மக்களிடையே மிகப்பெரிய வரவேற்பு இருக்கிறது. கூட்டணி, தவெக தலைவர் விஜய் பற்றி கேள்வி கேட்டால் இனிமேல் பதில் சொல்ல மாட்டேன் என்றார்.