தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நானே அங்கிள் என்று கூறுவேன். விஜய் அங்கிள் எனப்பேசியது தவறாக படவில்லை என்று இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் கூறியுள்ளார்.
தமிழக வெற்றிக் கழகம்(தவெக) இரண்டாவது மாநில மாநாடு மதுரை பாரபத்தியில் கடந்த 21-ம் தேதி நடைபெற்றது. இந்த மாநாட்டில் தவெக தலைவர் நடிகர் விஜய் திமுகவை கடுமையாக விமர்சனம் செய்து பேசினார். குறிப்பாக, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை ராங் அங்கிள் என்று பலமுறை கூறினார். அத்துடன் தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளது. பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று பேசியவர், வரும் சட்டமன்றத் தேர்தலில் டிவிகே(தவெக), திமுக ஆகிய கட்சிகளிடையே தான் போட்டி என்று பேசினார்.
ஒரு கட்சியின் தலைவரான விஜய், நடிகரைப் போல பேசுவது சரியல்ல என பல்வேறு கட்சியின் தலைவர்கள் கடும் விமர்சனம் செய்தனர். அத்துடன் தமிழ்நாடு முதலமைச்சரை அங்கிள் என்று விஜய் பேசியதற்கு திமுகவினர் சமூக ஊடகங்களில் கடும் எதிர்வினையாற்றினர். இந்த நிலையில், இயக்குநர் கே.எஸ்,ரவிக்குமார், தவெக தலைவர் விஜய், மு.க.ஸ்டாலினை அங்கிள் என்று பேசியதற்கு கருத்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், “எனக்கும் அரசியலுக்கும் எந்த ஒரு சம்பந்தமும் கிடையாது. அனுபவமும் கிடையாது. நான் நிறைய முறை முதல்வர் ஸ்டாலின் வீட்டுக்கு சென்று இருக்கிறேன். நானே வணக்கம் அங்கிள்.. வணக்கம் ஆண்ட்டி.. எப்படி இருக்கீங்க என்று தான் சொல்வேன். அது போல நடிகர் விஜய் பேசியது எதுவும் தவறாக தெரியவில்லை. அவர் நேரில் பார்த்தாலும் வணக்கம் அங்கிள், எப்படி இருக்கீங்க அங்கிள் என்று தான் பேசுவார். அதைத்தான் அன்று பப்ளிக்கில் சொல்லி இருக்கிறார். அதற்கு வேறு ஒரு பொருளை எடுத்துக்கொண்டு பலரும் பேசிக்கொண்டிருக்கிறார்கள். அது தவறான வார்த்தையே கிடையாது. அன்றைக்கு தொண்டர்களை ஜாலிப்படுத்துவதற்காக அப்படி பேசி இருக்கலாம். இதை விட்டு விட்டு… நாட்டுக்கு என்ன நல்லதோ அதை செய்ய வேண்டும்” என்று கூறினார்.
விஜய் கூறிய அங்கிள் என்பதே சர்ச்சையாகி முடியாத நிலையில், ஸ்டாலினை ஸ்டாலின் என்று தான் அழைப்பேன் என்று இயக்குநர் கே.எஸ்.ரவிகுமார் கூறியுள்ளது அடுத்த சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.