கரூர் துக்க சம்பவத்தையொட்டி, தவெக கட்சி சார்பில் தீபாவளியை கொண்டாட வேண்டாம் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் கூறியுள்ளார்.
கரூரில் செப்டம்பர் .27-ம் தேதி நடந்த தவெக தலைவர் விஜய் பிரச்சாரக் கூட்டத்தின் போது ஏற்பட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவம் தேசிய அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த வழக்கை சிபிஐ விசாரிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த நிலையில், தலைமறைவாக இருந்த தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் சென்னை நீலாங்கரையில் உள்ள விஜயின் வீட்டில் அவரை சந்தித்து ஏறத்தாழ 20 நிமிடங்கள் ஆலோசனை நடத்தினார்.
இந்நிலையில், இந்த ஆண்டில் தவெக சார்பில் யாரும் தீபாவளி பண்டிகையை கொண்டாட வேண்டாம் என தவெக நிர்வாகிகளுக்கு அக்கட்சியின் பொதுச் செயலாளர் என்.ஆனந்த் உத்தரவு பிறப்பித்துள்ளார். கரூரில் நிகழ்ந்த எதிர்பாராத சம்பவத்தால் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதே போல தவெக கொள்கை பரப்பு இணைச் செயலாளர் லயோலா மணி தனது எக்ஸ் தளத்தில், “கரூரில் நிகழ்ந்த எதிர்பாராத சம்பவத்தால் நம்மைவிட்டுப் பிரிந்த நம் சொந்தங்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், தவெக தலைவர் விஜய்யின் அறிவுறுத்தலின்படி, இந்த ஆண்டு கழகத்தின் சார்பில் யாரும் தீபாவளிப் பண்டிகையை கொண்டாட வேண்டாம்” எனத் தெரிவித்துள்ளார்.
